சென்னை: தமிழ்நாடு அரசு எடுக்கும் நல்ல முடிவுக்கு உறுதுணையாக இருப்போம் என்று மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினரும், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான செங்கோட்டையன் கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில்த ற்போது மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இன்றைய கூட்டத்தொடரில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா ஒருமனதாக நிறைவேறியது.
இன்றைய விவாதத்தின்போது பேசிய அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன், தமிழகத்தில் திராவிட கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சிக்கு வருமே தவிர, திராவிட மண்ணை யாராலும் வீழ்த்த முடியாது என கூறினார்.
மேலும, மாணவர்கள் இடைநிற்றல் பூஜ்ஜியம் புள்ளி 75 சதவிகிதமாக இருப்பதாகவும், அதுவும் இருக்கக் கூடாது என்பது தான் தங்களின் கொள்கை எனவும் கூறினார்.
கடந்த அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து பேசியவர், யாழ்பாணத்திற்கு ஒரு லட்சம் நூல்கள் வழங்கியது, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு நூல்களை அனுப்பி வைத்தல், கல்வி தொலைக்காட்சி தொடங்கியது குறித்தும் விளக்கினார்.
மேலும் தற்போதைய தமிழக அரசு எடுக்கும் நல்ல முடிவுக்கு அதிமுக துணைநிற்கும் என்று கூறியவர், அது இரு மொழிக் கொள்கையாக இருந்தாலும் சரி… நீட் தேர்வாக இருந்தாலும் சரி… அரசு எடுக்கும் நல்ல முடிவுக்கு உறுதுணையாக இருப்போம் என கூறினார்.