சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் மரியாதை செலுத்தினார். அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில்,  “திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்” என அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (டிசம்பர் 5) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் அதிமுகவினர் அவரது உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் வண்ண வண்ண பூக்களால் அலங்கரிப்பட்டுள்ளது. பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் உள்ளிட்டோர், ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி  சென்னையில் எடப்பாடி தலைமையில் அதிமுகவினர் ஜெ. சமாதிக்கு  ஊர்வலமாக சென்று,. மெரினாவில் உள்ள ஜெ. சமாதியில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.  அதைத்தொடர்ந்து, அங்கு அதிமுகவினர் உறுதிஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

 மக்களால் மக்களுக்காவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, தன் ஈடு இணையில்லா மக்கள் நலத் திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒப்பற்ற ஆளுமை உயிராய், உணர்வாய், உந்துசக்தியாய்த் திகழும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை அவர்தம் நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்  என்றும், தீயசக்திகளின் ஆட்சியை விரட்டி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடிய தமிழ்நாட்டைக் கட்டமைப்பதே அவருக்கு நாம் செலுத்தும் புகழஞ்சலி” என தெரிவித்திருந்தார்.

பின்னர் உறுதிமொழியை வாசித்தார். அதை அதிமுகவினர் அப்படியே கூறினர். அதனப்டி,

‘’இந்திய அரசியல் வரலாற்றில், ஏழைகளின் இதயம் தொட்டவர். புரட்சித் தலைவர் வழியில் அயராது உழைப்போம். கழகம் காக்க கட்சிக்குள் சிங்கமெனத் திகழ்ந்த புரட்சித் தலைவியின் வழியில் திமுக ஆட்சியை அகற்றுவோம் என்று உறுதி ஏற்போம். அயராது உழைப்போம்.

மக்களை ஏமாற்றி வரும் பொம்மை முதலமைச்சரின் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர், மருமகன் அதிகாரம் செலுத்தும் நபர். இந்த போலி திராவிட மாடலின் பொய் முகத்தை அம்பலப்படுத்துவோம்’’ என்று உறுதி கூறினார். அவரைப் பின்தொடர்ந்து பிற நிர்வாகிகள் அதையே வழிமொழிந்து முழக்கம் இட்டனர்.

இந்த நிகழ்ச்சியில்,  எடப்பாடி பழனிசாமி  உடன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், அவை தலைவர்  மற்றும் தொண்டர்கள் என நூற்றக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து,   அதிமுகவினர் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.