பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில், அமைச்சர் 40 சதவிகிதம் கமிஷன் வாங்குவதாக கூறிய, காண்டிராக்டர்  திடீரென தற்கொலை செய்து கொண்ட நிலையில், சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல், தங்களிம் கமிஷன் பெறும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பெயரை வெளியிடு வோம் என ஒப்பந்ததாரர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீலை தற்கொலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது உடுப்பி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், செய்தியளார்களை சந்தித்த  கர்நாடக ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் கெம்பண்ணா, மாநில அரசுமீது கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்தியதுடன், ஒவ்வொரு அரசு ஒப்பந்தம் மீதும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் கமிஷன் வாங்குகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். மேலும், ஒப்பந்த தாரர் சந்தோஷ் பட்டீல் தற்கொலைக்கு காரணம் அமைச்சர் ஈஸ்வரப்பாதான் பகிரங்கமாக குற்ம் சாட்டியதுடன், அவர்மீது கடுமையான நடவடிக்கையை மாநில அரசு எடுக்கவில்லை என்றால்,  அடுத்த 3-4 நாட்களில்,  அதிக அளவில் கமிஷன் பெறம் நான்கு ஐந்து அமைச்சர்கள் மற்றும் 10 முதல் 15 எம்எல்ஏக்கள் பெயர்களை வெளியிடுவோம் என எச்சரிக்கை விடுத்ததுட, இது இது ஒரு பொது ஆவணமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் ஆகியோரிடம் மனு அளித்தும், மாநிலத்தில் ஆழமாக வேரூன்றி யிருக்கும் ஊழலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறியதுடன், விசாரணை நடத்துவதற்கு சுயாதீன அமைப்பொன்றை நியமிக்குமாறு அரசாங்கத்தைக் கோரி அடுத்த மாதம் மாபெரும் போராட்டமொன்றை நடத்துவதற்கு சங்கம் தீர்மானித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும், கர்நாடகாவில், நீர்வளம், பொதுப்பணித்துறை, சுகாதாரம் ஆகிய துறைகள் ஊழல் மிகுந்த துறைகள் என்று விமர்சித்த கெம்பண்ணா, மே 25 முதல் ஒரு மாதத்திற்கு அனைத்து அரசுப் பணிகளையும் நிறுத்த கர்நாடக ஒப்பந்ததாரர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து,  கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.