காபுல்

மெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தாலிபான்கள் ஆப்கான் படைகளுக்கு எதிராக மீண்டும் நடவடிக்கை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த 1990 களின் முற்பகுதியில் முஜாஹிதீன்களின் ஆப்கானிஸ்தான் பிரிவினரால் தாலிபான் உருவாக்கப்பட்டது. சோவியத்தின் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பை எதிர்த்த இஸ்லாமியப் போராளிகளான தாலிபான்  (1979-89) அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு மற்றும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆகியவற்றின் ஆதரவுடன்  செயல்பட்டனர்.  கடந்த 1996 முதல் 2001 வரை, ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சி நடந்தது.

கடந்த 2002 ஆம் ஆண்டு அதிகாரத்தில் இருந்து அமெரிக்காவால் தாலிபான்கள் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டனர்.  அப்போது முதல் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைக்கு எதிராகத் தாலிபான்கள் போரிட்டு வருகின்றனர்.   இந்நிலையில் கடந்த மாத இறுதியில் கத்தார் நாட்டின் தோஹா நகரில் அமெரிக்கா மற்றும் தாலிபான்கள் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

நேற்று தாலிபான்களின் செய்தி தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகித் செய்தியாளர்களிடம், “அமெரிக்காவுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தப்படி எங்களது முஜாகிதீன்கள் வெளிநாட்டுப் படைகளைத் தாக்க மாட்டார்கள்.  ஆனால் காபுல் நிர்வாகம் மற்றும் காபுல் படைகளுடனான எங்களது நடவடிக்கை மீண்டும் விரைவில் தொடங்க உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.