சியோல்: தென்கொரியாவில் கொரோனா வைரஸ் உருவான பிரதான மையப்பகுதியான வழிப்பாட்டு தலத்தின் மத தலைவர் அந்நாட்டு மக்களிடம் முழங்காலிட்டு மன்னிப்பு கோரி இருக்கிறார்.

அந்நாட்டின் ஷின்சியோன்ஜி தேவாலயத்தில் தான் கொரோனா வைரசின் முதல் தாக்கம் கண்டறியப்பட்டது. அதனால் பல்லாயிரக்கணக்கானோர் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 2,500 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந் நிலையில் கொரோனா பரவ முக்கிய காரணம், ஷின்சியோன்ஜி ஆலய நிர்வாகிகள், உறுப்பினர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டது. பாதிப்புக்கு உள்ளானவர்களில் 60 சதவீதம் பேர் இந்த சபை உறுப்பினர்கள் ஆவர். இதையடுத்து, சியோல் நகர நிர்வாகம் ஷின்சியோன்ஜி நிறுவனர் லீமேன் ஹீ உள்ளிட்ட பலர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க, மதத்தலைவர் லீமேன் ஹீ, செய்தியாளர்கள் முன்பாக முழங்காலிட்டு அரசிடமும், நாட்டு மக்களிடமும் 2 முறை மன்னிப்பு கோரியிருக்கிறார்.

ஒரு வெள்ளை முகமூடி, மூடுபனி கண்ணாடிகளை அணிந்திருந்த லீ, தனது பேச்சின் நடுவில் எழுந்து நின்று, மண்டியிட்டு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார். அவர் மேலும் பேசியதாவது:

இது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது, ஆனால் நாங்கள் அதிக முயற்சிகளை மேற்கொள்வோம், நாங்கள் தவறு செய்ததை நாங்கள் அறிவோம்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாங்கள் முயற்சித்தவை போதுமானதாக இல்லாதபோது முயற்சிகளை மேற்கொண்ட அரசாங்கத்திற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம் என்றார்.