டில்லி: அ.தி.மு.கவை மீட்போம் என்று தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். தெரிவித்ததாவது:
“இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி மேலும் ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளோம்.
ஆர்கே நகர் இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது குறித்தும், அங்கு கைப்பற்றப்பட்ட பணம் குறித்ததுமான விசாரணை துரிதபடுத்த வேண்டும். தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற தினகரன், சுகேஷ் மீதான விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்.
அதிமுக பொது செயலராக நியமன முறையில் தேர்வு செய்யப்பட்ட சசிகலா, தொடர்ந்து பணியாற்ற தார்மீக உரிமை கிடையாது. அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் சசிகலாவால் நியமிக்கப்பட்டார். இதனால், சீனிவாசன் வங்கி பணத்தை எடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். சீனிவாசன் நியமனம் தவறானது. கட்சி பணத்தை கையாள சீனிவாசனுக்கு உரிமை கிடையாது.
குடியரசு தலைவர் பதவிக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்டபின்னர் தான் யாருக்கு ஆதரவு என முடிவு அறிவிக்கப்படும்.
அதிமுக என்பது தொண்டர்களின் இயக்கமாக செயல்பட வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை. இதனை எதிர் அணியினர் சொல்லவில்லை. ஆனால் நாங்கள் அதிமுகவை மக்கள் இயக்கமாக அதிமுகவை மீட்டெடுப்போம். மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். நிர்வாகிகள் தான் அவர்கள் பக்கம் உள்ளனர்.
இரு அணிகளுக்கு இடையேயான பேச்சு ஆமை வேகத்தில் செல்கிறது. பேச்சுவார்த்தைக்கான தடைக்கு யார் காரணம் என்பது மக்களுக்கு தெரியும்” என்று ஓ.பி.எஸ். தெரிவித்தார்.