த்து வருசம் கழிச்சி தன்னோட ரசிகர்களை சந்திக்கிறாரு ரஜினி. வரலாத்துல பதிக்கவேண்டிய இந்த சந்திப்பை தவற விட முடியுமா.  ரஜினிக்கு சொந்தமான சென்னை கோடம்பாக்கம் கல்யாண மண்டபத்தில நடந்த அந்த சந்திப்பு நிகழ்ச்சிக்கு நானும் போனேன்.

ரஜினி பேச்சு வழக்கம்போலத்தான் இருந்துச்சு. “தூய்மையான அரசியல் அவசியம். சில அரசியல்வாதிங்க, என்னை வச்சு ஆதாயம் அடைய பாக்குறாங்க. அரசியலை வச்சு பணம் சம்பாதிக்கிறது எனக்கு பிடிக்கலை” அப்படின்னு எல்லாம் பேசினவரு, “நான் ஒரு கருவி. ஆண்டவன்தான் என்னை ஆட்டுவிக்கிறான். இப்போ நடிகனா ஆட்டுவிக்கிறான். நாளைக்கு எப்படியோ”னு முப்பது வருசத்துக்கு முன்னால பேசினைதேயே பேசினார்.

“ஏற்கெனவே சொல்லியிருக்கேன்”னு சொல்லித்தான் இதையும் சொன்னாரு. நல்ல மனுசன்.

இப்போ மறுபடி எல்லாரையும்.. குறிப்பா அரசியல்வாதிகளை குழப்பியிருக்காரு ரஜினி. அரசியலுக்கு வருவாரா.. வந்தா எந்த கட்சியில சேருவாரு.. இல்லேன்னா தனிக்கட்சி துவங்குவாரா… இப்படி பலவித யூகங்கள், குழப்பங்கள்.

ரஜினி பேச்சைக் கேட்டு வெளியில வந்த எனக்கு தலையை சுத்துச்சு. அதனால ராகவேந்திரா கல்யாண மண்டபத்துக்கு எதிரே பத்து கடை தள்ளியிருக்கிற ஜூஸ் கடையிலி “டபுள் லெமன் போட்டு ஒரு ஜூஸ் கொடுப்பா”னு ஆர்டர் பண்னிட்டு காத்திருந்தேன்.

அங்கன இருக்கிற டிவியில ரஜினி பேச்சு மறுபடி மறுபடி ஓடுச்சு. அதைப் பார்த்துகிட்டிருந்த ரஜினி ரசிகரு ஒருத்தரு தனக்கு பக்கத்துல இருந்த இன்னொரு ரசிகருகிட்ட, “தலைவர் பேச்சை கேட்டியா.. அவரு எந்த கட்சியில சேருவாருன்னு புரியுதா”னு கேட்டாரு.

எனக்கும் ரொம்ப ஆர்வமா போச்சு. அந்த ரசிகரு என்ன சொல்லப்போறாருன்னு கேட்க நானும் காதை தீட்டிகிட்டு நின்னேன்.

அந்த ரசிகரு சொன்னாரு:

“எனக்கென்னமோ, ரஜினி பாமகவுல சேருவாருன்னுதான் தோணுது.

அவரு பேசறப்போ, “அப்போது சிகரெட், குடிபழக்கத்தை கைவிடுங்க.  குடிப்பழக்கத்தால் மனநிலையும் பாதிக்கப்படும்.

இதைச் சொல்ல நான் யோகி இல்லை. எனக்கும் முன்பு  குடிப்பழக்கம் இருந்தது. இதனால் படப்பிடிக்கு தாமதமாக சென்றிருக்கிறேன். பிறகு இயக்குநர் முத்துராமன் கூறிய அட்வைஸால் படப்பிடிக்கு முதல் ஆளாக செல்ல துவங்கினேன்” என்றார்.

படப்பிடிப்பு, தாமதம்.. இதையெல்லாம் விடுங்க.

மது, புகை வேண்டாம்னு தீவிரமா பிரச்சாரம் செய்துகிட்டிருக்கிற கட்சி பா.ம.க. தான்.  குறிப்பா, நெடுஞ்சாலை மதுக்கடைகளை ஒழிச்சது பாமகதான்.

ஆக, ரஜினியோட இந்த மது,புகை எதிர்ப்பு பேச்சை வச்சு பார்க்கறப்போ அவரு பா.ம.கவில சேரப்போறார்னுதான் தோணுது!”ன்னு சொல்லி முடிச்சார்.

இது எப்படி இருக்கு?