சென்னை

மமுக தலைவர் டிடிவி தினகரன் தாம் மதவாத பாஜகவுடன் என்றும் கூட்டணி அமைக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு முன்றாக உடைந்த அதிமுக வின் இரு அணிகள் மட்டும் ஒன்றாக இணைந்தன.  ஆனால் டிடிவி தினகரனின் அணி மட்டும் தனியாக அமமுக என்னும் பெயரில் இயங்கி வருகிறது.  எடப்பாடி – ஒபிஎஸ் அணிக்கு  அதிமுக சின்னமான இரட்டை இலை கிடைத்த பின்பும் சென்னை ஆர் கே நகர் தொகுதியில் டிடிவி தினகரன் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது நடைபெறும் மக்களவை தேர்தலில் 37 தொகுதிகளிலும் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அமமுக கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கையில் அவர் எதிர்காலத்தில் அதிமுக அல்லது பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர வாய்ப்புண்டா என கேட்கப்பட்டது.

இதற்கு டிடிவி தினகரன், “இது அம்மாவின் அரசு இல்லை என்பதை மக்கள் எனக்கு ஆர்கே நகர் வெற்றி மூலம் தெரிவித்து விட்டனர். அவர்கள் இந்த அரசை கவிழ்த்து விட்டு உண்மையான அம்மாவின் அரசை அமைக்க விரும்புகின்றனர். அம்மாவின் ஆயுள் காலத்தில் மக்களுக்கு எதிரான திட்டம் எதையும் அவர் அனுமதிக்கவில்லை. நீட், மீதேன் திட்டங்கள் அவரால் அனுமதிக்கப்படவில்லை.

கடந்த மக்களவை தேர்தலில் மோடியின் பாஜக, சாதிக்கட்சியான பாமக மற்றும் விஜயகாந்தின் தேமுதிக போன்ர எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் அம்மா தனித்து போட்டியிட்டார். ஆனால் அவர் மறைவுக்கு பிறகு தற்போதைய அதிமுக தலைவர்கள் அம்மாவின் எதிரியுடன் இந்த தேர்தலில் கைகோர்த்துள்ளனர்.

மத்திய அரசை பொறுத்தவரை மதவாத பாஜகவுடன் நாங்கள் என்றும் கூட்டணி அமைக்கப் போவதிலை. ஆனால் காங்கிரஸ் மதச் சார்பற்ற கட்சி என்றாலும் எல்லா நேரத்திலும் தமிழ் மக்களின் நலனை அக்கட்சி மனதில் கொள்வதில்லை. அதனால் தான் நாங்கள் இந்த இரு கட்சியும் இல்லாமல் மக்களவை தேர்தலில் தனியாக களம் இறங்குகிறோம்.” என பதில் அளித்துள்ளார்.