வேலூர் :
கடன்களை ரத்து செய்வது என்பது ஏழை மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுவதற்கான வாய்ப்பாகும். அந்த வகையில், மக்கள் வாழ்க்கையில் ஒளியேற்றும் திட்டங்களை செயல்படுத்துவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் எனும் தேர்தல் பிரசாரக் கூட்டம் வேலூர் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே உள்ள கந்தனேரி ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்று பேசியது:
அடுத்தவர் நம்பிக்கை பெறுவது மிகப்பெரிய சொத்தாகும். அத்தகைய நம்பிக்கையுடன் இங்கு மனு அளிக்க வந்துள்ள மக்கள்தான் எனது மிகப்பெரிய சொத்தாக கருதுகிறேன். அந்த நம்பிக்கையை காப்பற்றும் விதமாக தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த 100 நாள்களுக்குள் மக்கள் அளித்துள்ள அனைத்து கோரிக்கைகளும் தீர்க்கப்படும். இதற்காக தனித்துறையை ஏற்படுத்தி தமிழகம் முழுவதும் ஒரு கோடி மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். இதன்மூலம், அதிமுக அரசு செய்யத்தவறிய அனைத்து கடமைகளையும் திமுக நிச்சயம் நிறைவேற்றும்.
தமிழகம் முழுவதும் ஏராளமான பள்ளிகளை திறந்தவர் காமராஜர். அவருக்கு அடுத்து கருணாநிதி ஆட்சியில் தான் ஏராளமான கல்லூரிகள் திறக்கப்பட்டன. அவர்கள் வரிசையில் தமிழர்களுக்கு கல்வியுடன் சேர்த்து தகவல் தொழில்நுட்பத்துறைக்கு முக்கியத்துவம் அளித்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாததால் இளைஞர்கள் சக்தி வீணாகிவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்றப்படும்.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக எப்போதும் பின்வாங்கியதில்லை. கடந்த மக்களவைத் தேர்தலின்போது அளிக்கப்பட்ட விவசாயக் கடன் ரத்து, கூட்டுறவு வங்கியில் உள்ள 5 பவுனுக்கு உள்பட்ட நகைக்கடன் ரத்து, கல்விக்கடன் ரத்து ஆகிய வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும். இப்படி கடன்களை ரத்து செய்வதால் அரசு கடனில் மூழ்கிவிடும் என கூறுவோர், கார்ப்ரேட் நிறுவன ங்களுக்கு பல லட்சம் கோடி கடன் ரத்து செய்யும் மத்திய அரசை நோக்கி இந்த கேள்விகளை எழுப்புவதில்லை.
ஏழை மக்களின் கடன்களை ரத்து செய்வது அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றுவதற்கான வாய்ப்பாகும். தவிர, இலவச திட்டங்கள் என்பதும் கவர்ச்சி திட்டங்கள் அல்ல, அடிப்படை வாழ்க்கை தரத்தை முன்னேற்றும் திட்டமாகும். அந்தவகையில், மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் திட்டங்களை திமுக நிச்சயம் செயல் படுத்தும். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் மிகவும் பின்தங்கிவிட்டது. எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தொகுதிகளில்கூட அவலங்கள் நிறைந்துள்ளன. ஆனால், திமுக ஆட்சி என்பது மக்கள் அரசாக, மக்கள் விரும்பும், அவர்களின் கவலைகளை போக்கும் அரசாக திகழும் என்று ஸ்டாலின் கூறினார்.
இதில், திமுக பொதுச்செயலர் துரைமுருகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், வேலூர் மக்களவை உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.