புதுடெல்லி: கடைகளைத் திறக்க அனுமதிப்பதில், மத்திய உள்துறை அமைச்சகம் வகுத்திருக்கும் விதிமுறைகள் பின்பற்றப்படும் என்று அறிவித்துள்ளார் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்.

மேலும், ஊரடங்கு விஷயத்தில் எந்த தளர்வும் அறிவிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, “அடிப்படையான தேவைகளுக்கான சேவைகள் தொடரும். மருந்துக் கடைகள், மளிகைக் கடைகள், பழம் மற்றும் காய்கறிக் கடைகள் மற்றும் பால் கடைகள் திறக்கப்பட்டிருக்கும். ஆனால், ஷாப்பிங் மால்கள் திறக்க அனுமதியில்லை.

அதேசமயம், குடியிருப்பு பகுதிகளில் தனித்திருக்கும் கடைகள் மற்றும் அருகாமை கடைகள், மத்திய அரசின் வழிகாட்டுதல்படி திறக்கப்படும். அதேசமயம், டெல்லியிலுள்ள 90க்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டு மண்டலங்களில், எந்தக் கடையும் திறக்க அனுமதியில்லை.

ஏப்ரல் 3ம் தேதி வரை, ஊரடங்கு கண்டிப்பாக பின்பற்றப்படும். எந்தத் தளர்வும் கிடையாது. இந்த கட்டுப்பாட்டு நிலையை நாம் தொடர வேண்டும்” என்றார் கெஜ்ரிவால்.