சென்னை: பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த ஓபிஎஸ் தரப்பு, நாடாளுமன்ற தேர்தலில் வேறு எந்த சின்னத்திலும் போட்டியில்லை, இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி யிடுவோம் என உறுதிபட தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு அரசியல் அனாதையாக உள்ள ஓபிஎஸ் அணியினர், தங்களது அணிக்கு எந்தவொரு பெயரையும் சூட்டாமல் நாங்கள்தான் அதிமுக என்று கூறி வருகின்றனர். ஆனால் எடப்பாடி தொடர்ந்த வழக்குகளில், எடப்பாடி பழனிசாமி தான் கட்சியின் பொதுச்செயலாளர் எனவும், அவருக்கே இரட்டை இலை சின்னம் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இருந்த போதும் ஓ.பன்னீர் செல்வம் தொடர் சட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பான வழக்குகளும் நிலுவையில் உள்ளன. மேலும், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கோரிய மனுவும் நிலுவையில் உள்ளது.
இந்த சூழ்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் அணி இணைந்துள்ளது. இதுதொடர்பாக பாஜகவுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திய ஓபிஎஸ் அணிக்கு சில தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதுபோல டிடிவி அணியும் சில தொகுதிகளை கேட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், பாஜக கூட்டணி ஒரு மெகா கூட்டணி, அதனால், ஒரே தொகுதியை இரண்டு மூன்று பேர் கேட்க கூடிய வாய்ப்பு உள்ளது. பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படும் என்றவர், இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கேட்பீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், உறுதியாக இரட்டை இலை சின்னத்தை தான் கேட்போம், அதில் தான் போட்டியிடுவோம் என தெரிவித்தார்.
ஓபிஎஸ்-ன் இந்த திடீர் தகவல் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.