சென்னை: ‘ஆட்சியில் பங்கு வேண்டும் என  கூட்டணி கட்சியான திமுகவின் தலைவரும், மாநில முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு  காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் சரவணன் கடிதம் எழுதி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியில் கூட்டணி ஆட்சியை வலியுறுத்தி வரும் இண்டியா கூட்டணி கட்சிகள், மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை கொண்டு வருவதில் ஆர்வம் காட்டுவதில்லை.  அதனால், திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரஸ், வி.சி.க போன்ற கட்சிகள் அவ்வப்போது கூட்டணி கட்சியை சார்ந்தவர்களுக்கும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்றும், அமைச்சர் பதவி ஏன்றும் என அவ்வப்போது போர்க்கொடி தூக்கி வருகின்றனர். பின்னர் கட்சி தலைமை, அது அவர்களின் தனிப்பட்ட கருத்து என கூறி, சலசலப்பை அமைதியாக்கி விடும்.

இந்த நிலையில், நடிகர் விஜய் தனது கட்சியான தவெக மாநாட்டில்,  கட்சியின் கொள்கைகளை அறிமுகம் செய்து வைத்து  பேசினார்.  அப்போது முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.  அதன்படி,   2026-ல் தவெகதான் ஆட்சி அமைக்கும் என உறுதிப்படத் தெரிவித்தவர்,   தங்களை நம்பி கூட்டணிக்கு வரும் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும் என அறிவித்தார். இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.  விஜயின் இந்த அறிவிப்பு விவாதப் பொருளாக மாறி உள்ளது.

இந்த பரபரப்பான நிலையில்,. ஆட்சியில் பங்கு வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள இண்டியா கூட்டணி தலைவரும், தமிழக முதல்வரான ஸ்டாலினுக்கு, காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளரான சரவணன் கடிதம் எழுதி இருக்கிறார்.

அவரது கடிதத்தில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று நடைபெற்ற கட்சி மாநாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் தங்கள் கட்சி கூட்டணி ஆட்சிக்கு தயார் என பேசி உள்ளார்.

ஆகவே, தாங்கள் தற்பொழுதே நமது கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி சபையில் இடம் அளிக்க வேண்டும். தங்கள் கட்சி தொடங்கிய காலம் முதல் கூட்டணி கட்சியின் ஆதரவில் தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள்

எனவே, தமிழகத்தில் தங்கள் தலைமையில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் நல்லது. இதை தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள். எனவே தமிழக மக்களின் எண்ணத்தை தாங்கள் நிறைவேற்றி தமிழகத்திற்கு தாங்கள் முன் உதாரணமாக திகழ வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், விஜய் பேசியதில் ஜாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்குப் பிடித்திருந்தது என்று தெரிவித்துள்ளார்.