திருச்சி: மனம்விட்டு பேசினோம்…! “நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்” என்று திருச்சி சிவா கேஎன்நேரு இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர்.

திருச்சி எஸ்பிஐ காலனியில் நமக்கு நாமே திட்டத்தில் இன்று புதிய டென்னிஸ் அரங்கை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்க வந்திருந்தார். அந்த திறப்பு விழா கல்வெட்டிலும் திருச்சி எம்பி சிவாவின் பெயர் இல்லாமல் இருந்தது. இதனால் திருச்சி சிவா எம்பி ஆதரவாளர்கள் கருப்பு கொடியை காட்டி நேருவுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் கடுப்பானார்கள். இதையடுத்து அந்த விழா நடந்த தெருவில் தான் திருச்சி சிவா வீடு இருக்கிறது. எனவே அப்போது விழாவை முடித்து அந்த வழியாக சென்ற நேரு அமைச்சர் ஆதரவாளர்கள் திருச்சி சிவா வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்

இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் மோகன் அளித்த புகாரின்பேரில் திமுக கவுன்சிலர்கள் காஜாமலை விஜய், முத்துச்செல்வம், ராமதாஸ், அந்தநல்லூர் ஒன்றியக்குழு தலைவர் துரைராஜ், பொன்னகர் பகுதி பிரதிநிதி திருப்பதி ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில் திருப்பதி தவிர, மற்ற 4 பேரும் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிர்வாகிகள் 4 பேர் உள்பட 5 பேரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திருச்சி சிவா,  நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு குழு 178 நாடுகள் கலந்து கொண்ட மா நாட்டிற்காக பக்ரேன் சென்று இருந்தேன். நடந்த செய்திகளை நான் ஊடகங்கள் வாயிலாகும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தெரிந்து கொண்டேன். இப்போது நான் எதையும் பேசுகின்ற மனநிலையில் இல்லை கடந்த காலத்திலும் இது போன்ற பல சோதனைகளையும் சந்தித்துள்ளேன், அதையெல்லாம் நான் பெரிதுபடுத்தியதில்லை யாரிடமும் சென்று புகார் அளித்ததில்லை. நான் அடிப்படையில் முழுமையான அழுத்தமான கட்சிக்காரன், தனி மனிதனை விட இயக்கம் பெரிது கட்சி பெரியது என்று எண்ணுபவன் நான். இப்போது நடந்து இருக்கிற இந்த நிகழ்ச்சி மிகவும் மன வேதனையை ஏற்படுத்துகிறது , நான் ஊரில் இல்லாத போது என்னுடைய குடும்பத்தார் மிகவும் மன வேதனைக்கு ஆளாகி உள்ளனர். என் வீட்டில் பணியாற்றிய 65 வயது பெண்மணி எல்லாம் காயப்பட்டு உள்ளார். நான் பேசுவதற்கு நிறைய உள்ளது ஆனால் நான் இப்போது பேசக்கூடிய மன நிலையில் இல்லை. மன சோர்வில் உள்ளேன், மனசு சோர்வு என்கிற வார்த்தையை நான் இதுவரை பயன்படுத்தவில்லை என்று கூறியிருந்தார். தன் வீட்டைத் தாக்கியது குறித்து இதுவரை காவல் நிலையத்தில் வழக்கு கூட பதிவு செய்யாமல் இருப்பது குறித்து திருச்சி சிவா தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

அதைத்தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த பல்வேறு அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் திருச்சி சிவாவைத் தொடர்பு கொண்டு சமாதானப்படுத்த முயற்சித்தனர்.

இந்த சம்பவம் திருச்சி திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற நிலை நீடித்தால், கட்சி உடைய வாய்ப்பு உள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கூறி வந்தனர். இது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கட்சி தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், திருச்சி சிவாவிடம் சமாதானத்துக்கு சென்றார் அமைச்சர் கே.என்.நேரு.

திருச்சி சிவா எம்.பி.யை அவரது இல்லத்தில் அமைச்சர் கே.என்.நேரு நேற்று ( வெள்ளிக்கிழமை சந்தித்தார்). மாலை 6 மணியளவில் மாவட்டச் செயலாளர்கள் காடுவெட்டி ந.தியாகராஜன் எம்எல்ஏ (வடக்கு), வைரமணி (மத்திய) உள்ளிட்டோருடன் திருச்சி சிவா வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்து டந்த நிகழ்வுக்காக திருச்சி சிவாவிடம் அமைச்சர் கே.என்.நேரு வருத்தம் தெரிவித்தார்.

15 நிமிடம் நீடித்த இந்தச் சந்திப்புக்குப் பின்னர் “நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்” என்று இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர். அதாவது கலைஞர் பாணியில் கண்கள் பனித்தது; இதயம் இனித்தது? என்ற போர்வையில்-..

அமைச்சர் கே.என்.நேரு கூறும்போது, “கடந்த 15-ம் தேதி திருச்சியில் அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எந்த ஊரில், எந்த நிகழ்ச்சி என்பதுகூட எனக்குத் தெரியாது. மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மேயர் உள்ளிட்டோர் என்னை அழைத்துச் சென்றனர். அப்படி சென்றபோது ராஜாகாலனியில் இறகுபந்து மைதானம் திறக்க வேண்டும் எனக்கூறினர். எந்த இடத்தில் அது உள்ளது என்பதுகூட எனக்குத் தெரியாது. எனது தொகுதியில் இருப்பதால் இதில் பங்கேற்க வந்தேன். அப்போது, சிலர் திருச்சி சிவா எம்.பி பெயர் போடமல் எப்படி நீங்கள் இந்த நிகழ்ச்சிக்கு வரலாம் என்றனர். அப்போது நிகழ்ச்சி ஏற்பட்டாளரைச் சந்தித்து பேசுமாறும், நான் என்ன செய்ய முடியும் எனவும் கூறிவிட்டு சென்றுவிட்டேன்.

அதற்குப்பின் நடக்கக்கூடாத, அதுவும் கட்சிக்குடும்பத்தில் உள்ள ஒருவரின் வீட்டில் நடக்கக் கூடாத அந்த விஷயம் நடைபெற்றது. எனது துரதிர்ஷ்டம் என்னவெனில், திருச்சி சிவா வீட்டின் முன் ஒரு பெரியவேனை, காவல் துறையினர் நிறுத்தி வைத்திருந்ததால் எனது வாகனம் அதற்கு பின்னால் நின்று போய்விட்டது. அப்போது இந்த தாக்குதல் நடந்துவிட்டது. நிகழ்ச்சியை முடித்துவிட்டு தஞ்சைக்குச் சென்றபோது, சிலர் காவல் நிலையத்துக்குச் சென்று தாக்குதல் நடத்தியதாக வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், அதில் தொடர்புடையவர்களை தேடிக் கொண்டிருப்பதாகவும் தகவல் தெரிவித்தனர். அப்போது திருச்சி சிவா இருக்கிறாரா? எனக் கேட்டேன். அதற்கு அவர் வெளிநாட்டில் இருப்பதாக கூறினர். தகவல் தொடர்பில் ஏற்பட்ட தவறு காரணமாகவே, இதுபோன்று நடந்துவிட்டது. இனிமேல் இப்படி நடைபெறாது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னிடம், ‘நீங்கள் இருவரும் திருச்சியில் கட்சியைக் கட்டிக்காத்து வருபவர்கள். உங்களுக்குள் எந்த பிரச்சினையும் இருக்கக்கூடாது’ என்றார். அதற்கு நான் ‘எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை. திருச்சி சிவா எங்க ஊர்க்காரர் (லால்குடி பகுதி). நான் இப்படியெல்லாம் செய்வேனா?’ என்றேன். திருச்சி சிவா அப்படியெனில் நேராகச் சென்று திருச்சி சிவாவைச் சந்தித்து சமாதானம் செய்துவிட்டு வரவும். அவரும், திமுகவின் மூத்த தலைவர். நாடாளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருப்பவருக்கு அவமதிப்பு ஏற்பட்டால் அது கட்சிக்கு நல்லதா? உங்களுக்குள் எவ்வித பிரச்சினையும் இல்லை என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதனால் கட்சிக்கும், ஆட்சிக்கும் நல்ல பெயர் வரும்’ என்றார்.

இதையடுத்து உடனடியாக திருச்சிக்கு வந்து திருச்சி சிவாவைச் சந்தித்துப் பேசினேன். எனக்குத் தெரிந்திருந்தால் நான் அனுமதித்திருக்க மாட்டேன். நீங்கள் எதையும் நினைத்துக் கொள்ள வேண்டாம். இனி இதுபோல் நடக்காது எனக் கூறிவிட்டேன். எங்களுக்குள் இருந்தவற்றை இருவரும் மனம் விட்டு பேசினோம்” என்றார் கே.என்.நேரு.

அதைத்தொடர்ந்து எம்.பி திருச்சி சிவா கூறும்போது, “முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகுந்த பொறுப்புணர்வுடன் ஆட்சி செய்து கொண்டுள்ள நிலையில், அவர் மனம் சங்கடப்படும்படி எந்த செயல்களும் நடந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறையுடன் உள்ளோம். அவர் எடுத்துக் கொண்டு இந்த முயற்சியால் அமைச்சர் கே.என்.நேரு என்னைச் சந்தித்துப் பேசினார்.

இருவரும் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டோம். அவருக்கு இதில் எவ்வித தொடர்புமில்லை எனக் கூறினார். நான் அதைக் கேட்டுக் கொண்டேன். எங்களைப் பொறுத்தவரை கட்சியின் வளர்ச்சி முக்கியம். அதற்காகவே எங்களது வருங்கால செயல்பாடுகள் இருக்கும் என்றார். அதைத் தொடர்ந்து இருவரும் கூட்டாக ‘நடந்தது நடந்ததாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்’ எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

அப்போது, காவல் துறையில் அளிக்கப்பட்ட புகார்கள் வாபஸ் பெறப்படுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘அதை அவர்கள் பார்த்துக் கொள்வர். கடந்த ஆட்சியில் 19 வழக்குகளைப் போட்டனர். அதிலிருந்தே வெளியே வந்துவிட்டோம்’ என அமைச்சர் கே.என்.நேரு சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.