நெல்லை: ”தமிழ்நாட்டில் 125 தொகுதிகளை குறிவைத்து பணியாற்ற வேண்டும்”  என நெல்லையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கிரிஷ் சோடங்கர்  வலியுறுத்தினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நெல்லையில்,   ”வாக்கு திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம்” என்ற தலைப்பில் மாநில மாநாடு  நடைபெற்றது.  மாநாட்டில், ‘தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் அகில இந்திய தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ”பாஜகவிற்கு சவால் விட்டு சொல்லுகிறோம். மக்களுக்காக குரல் கொடுத்து வருவது காங்கிரஸ் கட்சி தான். காவல்துறையை மேம்படுத்த வேண்டும். சட்டம் ஒழுங்கை சரி செய்ய வேண்டும் என தொடர்ந்து காங்கிரஸ் கட்சி குரல் கொடுத்து வருகிறது. மக்களுக்கான பிரச்சினைகளை காங்கிரஸ் எப்போதும் கையில் எடுக்கும். பாஜகவினர் பொய் பித்தலாட்டக்காரர்கள். திருட்டும் புரட்டும் சொல்லி போலி வாக்குறுதி கொடுத்து பாஜக ஆட்சிக்கு வந்தது.

பாஜகவின் காலை நிதீஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும் எப்போது வேண்டுமானாலும் வாரலாம் என காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகம் எதை சொல்கிறதோ அதனை மதிப்பவர்கள் காங்கிரஸ் கட்சியினர். அரசியலமைப்பு சட்டத்தை மதிப்பவர்கள் காங்கிரஸ் கட்சியினர். கொல்லைப் புறத்தில் ஆட்சி அமைப்பதை வேண்டாம் என புறக்கணித்தார்கள். வாக்கு திருட்டு மூலம் பாஜக மூன்று முறை ஆட்சி அமைத்துள்ளது.

வாக்கு சுதந்திரத்தை, தேசியத்தின் இறையாண்மையை ராகுல் காந்தி பாதுகாத்துள்ளார். இந்த மாநாடு முன்னோட்டம் தான். ராகுல் காந்தி மல்லிகார்ஜுன கார்க்கே ஆகியோர் தமிழகத்திற்கு வர உள்ளனர். 3 லட்சம் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கலந்துகொள்ளும் கிராம கமிட்டி உறுப்பினர்கள் மாநாட்டில் தேசிய தலைவர்கள் உரையாற்ற உள்ளனர்.” என்று செல்வப்பெருந்தகை பேசினார்.

இதையடுத்து,  மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் பேசும்போது, ”இவிஎம் மிஷினில் குளறுபடி இருப்பதாக ஆரம்பத்திலிருந்து நாம் குற்றம்சாட்டி வருகிறோம். ஆனால் தேர்தல் ஆணையம் நாங்கள் சரியாக இருக்கிறோம். எங்களிடம் குறை இல்லை. நீங்கள் சரி பார்த்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தனர். கர்நாடகாவில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஆர்எஸ்எஸ்ஐ சார்ந்த ஒரு தனியார் ஏஜென்சி மக்களிடம் சென்று ஒரு கணக்கெடுப்பு நடத்தினார்கள்.

அப்போது எழுந்த புகாரில் தேர்தல் ஆணையம் அந்த ஏஜென்சியை ஆய்வு செய்தபோது அது வாக்குகளை மாற்றி அமைப்தற்கான முயற்சி என்பது தெரிய வந்தது. எனவே அவர்கள் வாக்கு திருட்டை ஒரு அமைப்பாக செய்து வருகின்றனர். வாக்குத் திருட்டை ராகுல்காந்தி நாட்டிற்கு வெளிப்படுத்திய பிறகு தான் அவர்களின் கோல்மால் வெளிவந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக ஒரு அமைப்பாக அவர்கள் (பாஜக) வாக்கு பட்டியலை திருத்துகிறார்கள். இந்த குளறுபடிகளை எல்லாம் தாண்டி தான் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று வருகிறது. அப்புறம் எப்படி நீங்கள் வெற்றி பெற்றீர்கள்? என்று கேட்கலாம். நீங்கள் செய்யும் கோல்மாலை தாண்டி தான் நாங்கள் வெற்றி பெறுகிறோம்.

கோல்மால் செய்யாமல் இருந்தால் இந்நேரத்திற்கு நமது அரசாங்கம் அமைந்திருக்கும். ராகுல் காந்தி இந்த விஷயத்தை வெளிப்படுத்தியது போல் நாம் பட்டித்தொட்டி எங்கும் இந்த கோல்மாலை வெளிக்கொண்டு செல்ல வேண்டும். கிராம கமிட்டிகளை அமைக்க வேண்டும். பாஜகவின் எல்லா விதமான கோல்மாலையும் வெளிக்கொண்டு வர வேண்டும். கிராமம்தோறும் இவர்கள் செய்யும் அநியாயத்தை வெளிக்கொண்டு வர வேண்டும்.

வாக்கு திருட்டு என்பது வாக்குத்திருட்டு மட்டுமல்ல. நம் அதிகாரத்தில் திருட்டு.  குழந்தைகள் எதிர்காலத்தில் திருட்டு, மத நல்லிணக்கத்தின் திருட்டு. இப்படித் தான் பார்க்க வேண்டும். இந்த மாநாட்டுக்கு பிறகு பட்டித்தொட்டி எங்கும் நாம் இந்த வாக்குத்திருட்டை பற்றி பேச வேண்டும். பாஜகவினர் இத்தனை அரசாங்கம் வைத்திருக்கிறோம் என மார்தட்டி பேசும்போது இது திருடிய அரசாங்கம் என்பதை நாம் அனைத்து பக்கமும் ஒலிக்க வேண்டும்.” என்று சசிகாந்த் செந்தில் பேசினார்.

அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கிரிஷ் சோடங்கர் பேசும்போது, ”தமிழகத்தில் 125 தொகுதிகளை குறிவைத்து நாம் பணியாற்ற வேண்டும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தி பின்னால் இருக்கிறார் என்பதை காட்டும் வகையில் பீகாரில் நடந்த பேரணியில் அவர் பங்கேற்று ஆதரவை தெரிவித்துள்ளார். வாக்குரிமை என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் உரிமையாகும். அதை திருடக் கூடாது.

இந்தியாவின் எதிர்காலம் என்பது வாக்கு திருட்டை ஊக்குவிக்கும் தேர்தல் ஆணையத்தின் கையில் இல்லை. ஜனநாயகத்தை நம்பும் மக்களின் கையில் உள்ளது. தமிழ்நாடு எப்போதும் புரட்சியை செய்யக்கூடிய மாநிலமாக உள்ளது. சுதந்திர காலத்தில் மட்டும் இல்லாமல் இப்போதும் ஜனநாயகத்தை காப்பாற்ற தமிழ்நாடு புரட்சியில் முன்னுரிமையாக திகழும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன்” என்றார்.

மாநாட்டில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ப. சிதம்பரம், கே.வி. தங்கபாலு உள்பட பலர் பங்கேற்றனர்.