டெல்லி: டெல்லியில் மாநில முதல்வர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய மோடி, நீதிமன்றங் களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகளை வலியுறுத்தினார்.
டெல்லியில் முதலமைச்சர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாடு தொடங்கியுள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு மாநாடு நடைபெறுகிறது. நேற்று (வெள்ளிக்கிழமை) உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையில் 39-ஆவது தலைமை நீதிபதிகளின் மாநாடு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று மாநில முதல்வர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கலந்துகொள்ளும் மாநாடு நடைபெறுகிறது.
டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் இந்த மாநாட்டினை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்து உரையாற்றி வருகிறார். மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.
இந்த மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதல்வர்கள் கலந்துகொண்டுள்ளனர். தமிழகம் சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டுள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு, கடந்த 2015 ஆம் ஆண்டில், தற்போதைய காலக்கட்டத்திற்கு பொருத்தமற்றதாக மாறிய சுமார் 1800 சட்டங்களை கண்டறிந்தோம். இவற்றில் 1450 சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. 75 சட்டங்களை மாநிலங்கள் ரத்து செய்துள்ளன.
தொடர்ந்து பேசியவர், நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும். இது நாட்டின் சாமானிய குடிமக்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கையை அதிகரிக்கும் என்றவர்,
டிஜிட்டல் இந்தியா பணியின் இன்றியமையாத பகுதியாக நீதித்துறையில் தொழில்நுட்பத்தை இந்திய அரசு கருதுகிறது. இ-கோர்ட்டுகள் திட்டம் இன்று மிஷன் முறையில் செயல்படுத்தப்படுகிறது என்றும், நீதித்துறையை மேம்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். நீதித்துறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மேம்படுத்தவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்: டெல்லி விஞ்ஞான் பவனில் மாநில முதல்வர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் கூட்டு மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.