மக்களுக்கு இடையேறு ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்தை முற்றிலுமாக எதிர்ப்பதாகவும், இது தொடர்பாக கட்சி தொண்டர்களுக்கு ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக விளக்கம் அளித்துள்ளது.

சமீபத்தில் சென்னை பள்ளிக்கரனையில் அதிமுக நிர்வாகி வைத்த பேனர் விழுந்து, சுபஸ்ரீ என்கிற பெண் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இதில் தொடர்புடைய அதிமுக நிர்வாகி, பேனர் அச்சடித்த நிறுவனத்தின் உரிமையாளர் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கின் முந்தைய விசாரணையின் போது, தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் பேனர் வைப்பது தொடர்பாக பிரமான பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இத்தகைய சூழலில் அதிமுக சார்பில் அக்கட்சியின் மாநில சிறுபான்மை நலத்துறை துணை செயலாளர் ஜெ.சி.டி பிரபாகர், நீதமன்றத்தில் பிரமான பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “கடந்த டிசம்பர் 19, 2018ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கட்சியின் தொண்டர்களுக்கு அனுமதியின்றி பேனர் வைக்க கூடாது என்று அறிவுருத்தியுள்ளனர். இது தொடர்பாக செப்டம்பர் 13, 2019ம் ஆண்டு கட்சியின் தலைவர்கள் இருவரும் ஒருமித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டு, பேனர் வைப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், அதனால் அவற்றை தவிற்கும்படியும் அறிவுருத்தியுள்ளனர்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றிலும் எதிராக எங்களது கட்சி இருக்கிறது. இது தொடர்பாக எங்களது முந்தைய அறிவிப்பின் படி, தொண்டர்களுக்கு பேனர், கட் அவுட்கள், ப்ளக்ஸ் போர்டுகள் போன்றவைகளை வைக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைமையிடமிருந்து இது தொடர்பாக கடுமையான உத்தரவுகள் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நீதிமன்றத்தில், பேனர் கலாச்சாரத்திற்கு எதிராக அதிமுக இருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.