மெல்போர்ன்: ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணிக்கு, மகேந்திரசிங் தோனி அல்லது மைக்கேல் பெவன் போன்ற ஃபினிஷரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்.
இவர் அந்த அணியின் முன்னாள் வீரர் என்பது நம் நினைவில் இருக்கலாம். இந்தியாவில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா இழந்தது மற்றும் தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது உள்ளிட்ட காரணங்களால் அந்நாட்டு கிரிக்கெட்டில் சலசலப்பு எழுந்துள்ளது.
மேலும், அடுத்துவரும் நாட்களில் நியூசிலாந்திற்கு எதிராக ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் கருத்துக் கூறியுள்ள ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், “எங்கள் அணியில் நடுவரிசை என்பது பலவீனமாக உள்ளது. தொடக்க வீரர்கள் சிறப்பான ஆடினாலும், நடுவரிசை வீரர்கள் சொதப்புவது தொடர்கிறது.
ஒருகாலத்தில் மைக்கேல் பெவன் மற்றும் மைக்கேல் ஹசி போன்ற சிறந்த நடுக்கள வீரர்கள் அணியில் இருந்தார்கள். ஆனால், இன்று நிலைமை அப்படியில்லை. எனவே, நடுவரிசைக்கு நாங்கள் பல சோதனைகளை செய்ய வேண்டியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லர் இருக்கிறார். இந்திய அணியைப் பொறுத்தவரை, முந்தைய நாட்களில் மகேந்திர சிங் தோனி, தோற்க வேண்டிய பல ஆட்டங்களை தன்னுடைய ஃபினிஷிங் திறன் மூலம் வென்று கொடுத்துள்ளார்.
எனவே, அவரைப் போன்ற ஃபினிஷரைத்தான் நாங்கள் ஆஸ்திரேலிய அணிக்காக தேடிக்கொண்டிருக்கிறோம். நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரில், அதற்காக நிறைய சோதனை முயற்சிகளை மேற்கொள்வோம்” என்றார்.