உலக சுகாதார நிறுவனத்தின்(WHO) சமீபத்திய அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் தொற்றியும்கூட, அறிகுறிகளை வெளிப்படுத்தாத நபர்கள், அபூர்வமாகத்தான் பிறருக்கு தொற்றை ஏற்படுத்துகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அது உண்மையானால், தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கும், அதனால் ஏற்படும் பொருளாதார பேரிழப்பும் எதற்காக? என்றுள்ளார் கட்டுரையாளர் கேய்லி மெக்கீ.
அவர் கூறியுள்ளதாவது; வேறு பலரைப் போலவே, நானும் ஆரம்பத்தில் ஊரடங்கு நடிவடிக்கையை ஆதரித்தேன் என்பதை மறுக்கவில்லை. ஏனெனில், அந்த வைரஸ் எப்படிப்பட்டது, அதை யார் பரப்புகிறார்கள் என்பது பற்றி தெரியாத நிலையில், நமது சுகாதார அமைப்பை திக்குமுக்காடச் செய்துவிடக்கூடாது என்பதால்தான் அப்படி.
மேலும், கொரோனா வைரஸ் விரைவாகப் பரவுகிறது மற்றும் அறியாமல் பரவுகிறது என்றும், அறிகுறிகளை வாரக் கணக்கில் அல்லது எப்போதுமே வெளிப்படுத்தாத நபர்கள், அதைக் கடத்துகிறார்கள் என்று நமது சுகாதார நிபுணர்களால் கூறப்பட்டது. பெரியளவிலான பரிசோதனையில் நிலவியப் பற்றாக்குறை காரணமாக, தற்காலிக தேசியளவிலான தனிமைப்படுத்தலில் ஒரு காரணம் இருந்தது.
ஆனால், தற்போது ஒட்டுமொத்த முழு அடைப்பு என்பது கேள்விக்குள்ளாகிறது. உலக சுகாதார அமைப்பினுடைய சமீபத்திய அறிக்கையின்படி, அறிகுறிகளைக் காட்டாத நபர்கள், அபூர்வமாகத்தான் வைரஸை பிறருக்கு கடத்துகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய கண்டுபிடிப்பு, ஒருவரை எந்தளவிற்கு கோபமூட்டும் என்பதை வார்த்தைகளில் விவரிப்பது கடினம். உண்மை இதுவென்றால், அறிகுறி உள்ள நபர்களை மட்டுமே தனிமைப்படுத்தலில் இருக்கச் சொல்லிவிட்டு மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளை மட்டும் தனிமைப்படுத்திவிட்டு, மற்றவர்கள் தங்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமே!
ஆனால், எந்த நபரும், எந்த நேரத்திலும், கொரோனா வைரஸை, பிறருக்கு தொற்றிவிட்டு விடலாம் என்ற வகையில்தான் இப்போது நாம் செயலாற்றிக் கொண்டுள்ளோம்.
கடந்த சில மாதங்களாக, உலக சுகாதார நிறுவனம், தன்னை ஒரு நம்பகமான ஆராய்ச்சி அமைப்பாக நிரூபிக்காத காரணத்தால், இந்தப் புதிய தகவலை, வேறு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்த வேண்டுமென நான் விரும்புகிறேன். இந்தப் புதிய தகவல் உண்மையெனில், தங்கள் கருத்துகளில் தெளிவில்லாத சுகாதார நிபுணர்கள் சொன்னதை நம்பியது எனது தவறு என்பதை நான் முதல் ஆளாக ஒப்புக் கொள்கிறேன்.
நிபுணர்கள், தாங்கள் வெளியிடும் கருத்துகளில் பொறுப்பானவர்களாக இருப்பது அவசியம். ஏனெனில், அவர்கள் சிறிய தவறை செய்யவில்லை. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வைரஸை பரப்பலாம் என்று கூறியதன் மூலமாக, அவர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தைப் பெரியளவில் பதம் பார்த்ததோடு, பல்லாயிரம் நபர்களின் பணி வாய்ப்புகளையும் காலி செய்துள்ளனர்.
இதனுடைய பாதிப்பை, அடுத்துவரும் பல நாட்களுக்கு நாம் எதிர்கொள்ள வேண்டும் மற்றும் தேவையில்லாமல் நாம் முடக்கப்பட்டிருந்திருக்கிறோம் என்பதையும் நாம் உணர வேண்டும் என்றுள்ளார் அவர்.
https://www.washingtonexaminer.com/opinion/if-asymptomatic-carriers-dont-spead-coronavirus-we-just-shut-down-the-country-for-nothing?fbclid=IwAR1-adcdv5uMNz5n4RYe6n5x-4TNOfdZL1rakavOdppzovlDpuqf4cTNysc