எங்களுக்கு அதிகாரம் உள்ளது! வருமானவரித்துறை கொக்கரிப்பு!!

Must read

சென்னை,
தலைமைசெயலாளர் வீட்டில் சோதனை நடத்த எங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய வருமானவரித்துறை அறிவித்து உள்ளது.
இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த முன்னாள் தமிழக தலைமை செயலாளர் ராமமோகன்ராவ் மத்தியஅரசையும், வருமானவரித் துறையினயும் கடுமையாக சாடினார்.

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இதுபோல் ஒரு செயலை செய்ய முடியுமா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு வருமானவரித்துறை பதில் அளித்து உள்ளது. வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ராம மோகனராவின் மகன் விவேக்குக்கும், தொழில் அதிபர் சேகர்ரெட்டிக்கும் தொடர்பு உள்ளது. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் போதுமான அளவுக்கு உள்ளன. அந்த அடிப்படையில்தான் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
சோதனை நடத்துவதற்காக விவேக் பெயரில் வாரண்ட் பெறப்பட்டது. அந்த வாரண்டை வைத்துதான் 10-க் கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.
சோதனைக்கு உட்படுத்தப்படும் ஒருவரது உறவினர்கள் அனைவரது வீட்டிலும் நாங்கள் சோதனை நடத்துவது வழக்கம். அந்த வகையில் விவேக்கின் தந்தை என்ற அடிப்படையில் ராம மோகனராவ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அதற்கான அதிகாரம் வருமான வரித்துறைக்கு உள்ளது.
சோதனை நடத்தும்போது துணை நிலை ராணுவத்தை பயன்படுத்தக் கூடாது என்று எந்த விதியும் இல்லை. பிற மாநிலங்களில் வருமான வரி சோதனை நடந்தபோது பல தடவை பாதுகாப்புக்காக துணைநிலை ராணுவம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
ராமமோகன ராவ் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் நான்கே நான்கு துணைநிலை ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டது. இதில் எந்த தவறும் இல்லை.
ராமமோகன ராவ் வீட்டிலும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடத்துவதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
அந்த அனுமதி டெல்லியில் இருந்து கொடுக்கப்பட்டதாகும்.
அந்த அனுமதியின் பேரில்தான் தலைமை செயலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.
வருமான வரித்துறை சோதனை நடத்த யாருக்கு தகவல் தெரிவிக்கவோ, அனுமதி பெற வேண்டிய அவசியமோ இல்லை. சட்டப்படிதான் தலைமை செயலகத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
அதுபோன்ற சோதனை நடத்த வருமான வரித்துறைக்கு முழு சுதந்திரம் உண்டு. அந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டுள்ளது.
ராமமோகன ராவ் வீட்டிலும் அவரது மகன் விவேக் வீட்டிலும் விதிமுறை மீறி சோதனை நடத்தப்பட வில்லை. சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் சோதனை நடத்தப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More articles

Latest article