சென்னை,

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு இல்லை என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் சேர்ந்து கவர்னரை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

அதிமுகவின் ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைந்ததை தொடர்ந்து, அதிமுகவின் உட்கட்சி பூசல் மேலும் வலுவடைந்து வருகிறது.

ஏற்கனவே அதிமுகவின் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள்  கருணாஸ், தனியரசு, அன்சாரி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தற்போது 19 அதிமுக எம்எல்ஏக்கள் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

ஆனால், டிடிவி தரப்போ, தங்களுக்கு 35 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறி வருகின்றனர். தங்கள் அணியினர் ஸ்லிப்பர் செல்லாக எடப்பாடி அணியில் ஊடுருவி உள்ளதாக கூறி உள்ளனர்.

இந்நிலையில் டிடிவி தினகரன் எம்எல்ஏக்கள் அனைவரும் தனியார் ஓட்டல் ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தனர். மீண்டும் ஒரு கூவத்தூர் குதிரை பேரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் இன்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு அளித்து முறையிட்டுள்ளனர்.

அந்த மனுவில் முதல்வர் எடப்பாடி தங்களை கலந்து ஆலோசிக்காமல் புதிய அமைச்சர்கள் நியமனம் செய்திருப்பதாகவும், எடப்பாடி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.