புதுடெல்லி: நாம் நாட்டுப் பாதுகாப்பு என்று செய்யப்பட்ட பிரச்சாரத்தை நம்பி நரேந்திர மோடிக்கு வாக்களித்துவிட்டோம். ஆனால், நமது பொருளாதாரம் அல்லது பணத்தைப் பாதுகாப்பது தொடர்பாக சிந்தித்து யாரும் வாக்களிக்கவில்லை என்று கூறியுள்ளார் ஒரு விமர்சகர்.

எல்ஐசி நிறுவனத்தின் பணத்தை மோடி அரசு தொடர்ந்து குறிவைப்பதை அடிப்படையாக வைத்தே அவர் இந்த விமர்சனத்தை எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; இந்த அரசின் கடைசி பணப் புகலிடமாக எல்ஐசி நிறுவனம் உள்ளது. பொதுவாக அளவில் பங்குச் சந்தை நிலவும் முன்னேற்றமான நிலையில் இருந்தபோதும், எல்ஐசி முதலீடு செய்த அரசு நிறுவனங்களின் பங்குகள் தங்களின் மதிப்பில் சரிந்தே இருந்து வருகின்றன.

மேலும், எல்ஐசி முதலீடு செய்த நிறுவனங்களின் பங்கு விற்பனைகளும் லாபகரமானதாக இல்லை. ஐடிபிஐ பொதுத்துறை வங்கியில் எல்ஐசி 51% முதலீடு செய்ய எடுத்த முடிவும் தவறாகிப் போனது. ஏனெனில் அந்த வங்கி கடுமையான நஷ்டத்தில் இயங்கிக் கொண்டுள்ளது.

மொத்தம் ரூ.31 லட்சம் கோடி அளவிலான சொத்துக்களை வைத்திருக்கும் எல்ஐசி நிறுவனம், நாட்டின் பெரிய காப்பீட்டு நிறுவனமாகும். இது பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் மட்டும் முதலீடு செய்திருக்கவில்லை; கடந்த சில ஆண்டுகளாக, ரயில்வே, சாலை மற்றும் மின்சார துறைகளிலும் பங்களித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நரேந்திர மோடியின் அரசு, ரிசர்வ் வங்கியின் சேமிப்பு, எல்ஐசி நிறுவனத்தின் நிதி ஆதாரம் ஆகியவற்றை காலிசெய்து முடித்தப் பிறகு, கடைசியாக அதன் கவனம் வங்கிகளில் மக்கள் வைத்துள்ள சேமிப்புப் பணத்தை நோக்கி திரும்ப வாய்ப்புள்ளது என்றும் பலர் எச்சரிக்கின்றனர்.