இஸ்லாமாபாத்
பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து மற்றும் அதன் கிளை நதிகளின் நீர் குறித்த இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பில்லை என பாகிஸ்தான் கூறி உள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே ஓடும் சிந்து நதி உலகின் ஜீவ நதிகளில் ஒன்றாகும். இதன் முக்கிய கிளைநதிகள் ஜீலம், ஜைனாப், ராவி, பியாஸ், மற்றும் சட்லெஜ் ஆகிய நதிகள் ஆகும். இந்த நதி நீர் பாகிஸ்தான் நாட்டுக்கு முக்கிய நீராதாரம் ஆகும். இந்த நதிநீர் சிந்து நீர் ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளும் பங்கிட்டுக் கொள்கின்றன.
புல்வாமாவில் நடந்த பாகிஸ்தான் தீவிரவாத தற்கொலைப்படை தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடு பட்டு வருகிறது. அந்நாட்டுக்கு அளித்து வந்த வர்த்தக சலுகைகளையும் சிறப்பு அந்தஸ்தையும் இந்தியா திரும்ப பெற்றுக் கொண்டது.
இந்நிலையில் வெகு நாட்களாக திட்டமிட்டிருந்த சிந்து மற்றும் அதன் கிளை நதிகளில் அணை கட்டுமான பணிகளை இந்தியா தொடங்க உள்ளதாக தெரிவித்தது. அத்துடன் பாகிஸ்தானுக்கு செல்லும் இந்த நதிகளின் நீரை காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு திருப்பி விட உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
இது குறித்து பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா சுமைல் , “இந்தியா சிந்து மற்றும் அதன் கிளை நதிகளின் குறுகே அணை கட்டுவது குறித்தோ அல்லது நீரை திருப்பி விடுவது குறித்தோ எங்களுக்கு எவ்வித அக்கறையோ எதிர்ப்போ கிடையாது. எங்களுக்கு சிந்து நீர் ஒப்பந்தத்தின் படி கிடைக்க வேண்டிய அளவு நீர் கிடைத்தால் போதுமானது.
இந்தியாவுக்கு சேர வேண்டிய நீரை அந்நாடு பயன் படுத்தாததால் உபரி நீர் பாகிஸ்தானுக்கு வருகிறது. அதை பயன்படுத்த இந்தியா திட்டமிட்டிருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். எனவே பாகிஸ்தான் அந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை”” என தெரிவித்துள்ளார்.