டில்லி:

காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி இன்று திருப்பதி ஏழுமலையானை  தரிசித்தார். முன்னதாக அவர், மலை அடிவாரத்தில் இருந்து திருமலைக்கு பாத யாத்திரையாக நடந்து வந்தார். சுமார் 2 மணி நேரத்தில் 10 கி.மீ தூரத்தை கடந்தது வந்து சுவாமி தரிசனம் செய்தார்.

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஆந்திர வரும் ராகுல் காந்தி, ஏழுமலையானையும், பின்னர் காங்கிரஸ் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கும் வகையில்  நண்பகல் ரேணிகுண்டா வரை விமானத்தில் வந்தார். பின்னர் அங்கிருந்து சாலை வழியாக திருமலை அடிவாரம் வந்தார். அங்கிருந்து திருமலைக்கு பாத யாத்திரையாக மலைப் பாதை வழியாக நடந்து சென்றார்.

சுமார் 10 கீலோ மீட்டர் தூரத்தை 2 மணி நேரத்தில் பாத யாத்திரையாக கடந்த  ராகுலுக்கு வழி நெடுகிலும், பக்தர்கள் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். ராகுல்காந்தியின் இந்த நிகழ்வு பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

திருப்பதி கோவிலுக்குள் நுழையும் முன்பு தேவஸ்தான நுழை வாயில் அருகே ராகுலுக்கு  திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் சிறப்பான  வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்த ராகுலுக்கு தேவஸ்தானம் தரப்பில் பட்டுடை அணிவித்து, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. சுமார் 20 நிமிடம் அவர் கோவிலில் இருந்ததாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து மாலையில் நடைபெற உள்ள காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ராகுல் கிளம்பி சென்றார்.

ராகுலின் எளிய முறையிலான பாத யாத்திரை திருப்பதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏராளமனோர் ராகுலின் பாத யாத்திரையை காண குவிந்தனர்.

பொதுக்கூட்டம்  முடிந்தவுடன் ராகுல் மீண்டும் டில்லி திரும்புகிறார்.