புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு உருவான பின்னர், தமிழக முதல்வராக நாராயணசாமி தேர்வான பின்னர், அவர் போட்டியிட தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தவர் ஜான் குமார் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளோடு புதுச்சேரியின் காமராஜ் நகர் தொகுதிக்கும் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் திமுக மற்றும் அதிமுக தலைவர்களும், அதன் கூட்டணி தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர். திமுக கூட்டணியில் நாங்குநேரி மற்றும் புதுவை காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் காமராஜ் நகர் தொகுதியில் என்.ஆர் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது.

சமீப நாட்களாக பிரச்சாரத்தில் சர்ச்சைக்குறிய வகையில் பேசி வரும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், புதுவை காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமாரை ஆதரித்து இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு உருவான பின்னர், தமிழக முதல்வராக நாரயண சாமி தேர்வான பின்னர், அவருக்காக தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து தியாகம் செய்தவர் ஜான் குமார்” என்று ஸ்டாலின் தெரிவித்தார். புதுவை முதல்வர் நாராயணசாமியை, தமிழக முதல்வர் என்று கூறியதால் அங்கு சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது.

முன்னதாக நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் பிரச்சாரத்தின் போது, சொன்னதை தான் சொல்வோம், செய்வதை தான் சொல்வோம் என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லாத காரணத்தால் தான் சீன பாதுகாப்பு அதிகாரிகள் தமிழகம் வந்தனர் என்றும் சர்ச்சைக்குறிய வகையில் ஸ்டாலின் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.