மதுரை,

போக்குவரத்து ஊழியர் வேலை நிறுத்தத்தில் தலையிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

தங்களது கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை என்று தெரிவித்து நேற்று மாலை முதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பேருந்தில் பயணம் செய்த  பயணிகள் நடுவழியில் இறக்கிவிடப்பட்டனர். இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளானார்கள்.

இன்றும் வேலை நிறுத்தம் தொடர்கிறது. இந்த நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் குறித்து, உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து பொதுநல வழக்காக எடுத்துக்கொள்ள வேண்டும். வேலை நிறுத்தத்தை சட்டவிரோதமாக அறிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ரமேஷ் என்பவர் இன்று காலை முறையிட்டார்.

நீதிபதிகள் சத்யநாராயணா மற்றும் புஷ்பலதா ஆகியோர், தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று நாங்கள் அரசுக்கு பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம். ஆனால் அரசு அதை நிறைவேற்றவில்லை.

தொழிலாளர்களின் தரப்பிலிருந்தும் இந்த பிரச்சினையை அணுக வேண்டும். ஆகையால் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று மறுத்து உள்ளனர்.