வாஷிங்டன்,

ந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாக என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

அமெரிக்க சுற்றுப்பயணம் சென்றுள்ள  பிரதமர் மோடி அங்குள்ள  முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளின் மாநாட்டில் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் பிரபல நிறுவனங்களான  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சத்ய நாதெல்லா, கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை, அடோப்  நிறுவனத்தின் சாந்தனு நாராயணன், மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் அஜய் பங்கா உள்ளிட்ட 21 முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து  சுந்தர் பிச்சை கூறியதாவது, “பிரதமர் மோடி கலந்து கொண்ட இம்மாநாடு, இந்தியாவிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது. பல முக்கிய யோசனைகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. இந்தியாவில் முதலீடு செய்ய அனைவரும் ஆர்வமாக உள்ளனர். எல்லோருடனும் ஒன்றிணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாக உள்ளேன் என்றார்.

மேலும் ஜூலை 1-ம் தேதி ஜி.எஸ்.டி மசோதா அமலுக்கு வருவதை நாங்கள் எதிர்ப்பார்த்து வருகிறோம். மாற்றத்துக்கு இது ஒரு தொடக்கமாக இருக்கும்”

இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே தமிழகத்தில் கூகுள் நிறுவனத்தின் கிளை அமைக்க சுந்தர்பிச்சையுடன் தமிழக அரசு பேசி வருவதாக சட்டமன்றத்தில் 23ந்தேதி தொழில்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.