சென்னை: மக்களே, நமக்கு நாமே பாதுகாப்பு என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடுமையாக சாடி பதிவு போட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அரசியல் கொலைகள் அதிகரித்துள்ளது அரசுமீது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.
இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான, எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார்.
அவரது பதிவில்,
கடந்த 24 மணிநேரத்திற்குள் வந்த செய்திகள்:
●புதுக்கோட்டையில் மர்மநபர்களால் இளைஞர் வெட்டிப் படுகொலை.
●தஞ்சாவூர் மங்களபுரம் பகுதியில் 21 வயது இளைஞர் வெட்டிப்படுகொலை.
●தேனியில் குண்டர் சட்டத்தில் சிறைசென்று வந்தவரை கொடிய ஆயுதங்களுடன் ஒரு கும்பல் கொல்ல முயற்சி.
இனி இந்த விடியா திமுக அரசின் முதல்வரிடம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வலியுறுத்தி எந்த பயனும் இல்லை.
எனவே, மக்கள் பணியில் தான் நீங்களும் உள்ளீர்கள் என்ற அர்ப்பணிப்போடு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைக் காக்க காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.
விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகிவிட்டது.
மக்களே, நமக்கு நாமே பாதுகாப்பு!
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.