சென்னை: மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த இருப்பதாக தமிழ்நாடு  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1 கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் 50 இடங்களில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலைய பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளன. பணிகள் முடிவுற்றவுடன் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.

மதுரை எம்ய்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசிடம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். நாடாளுமன்றத்தில், மதுரை எம்ய்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் தோல்வியை ஒப்புக்கொள்ளும் வகையில் பேசிய ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர், மதுரை எம்ய்ஸ் மருத்துவமனையை விரைவில் கட்டுவோம் என கூறியுள்ளார்.

இதுதொடர்பாக  தமிழக அரசின் சார்பில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட வலியுறுத்த உள்ளோம். ஒன்றிய அரசு மதுரை எய்ம்ஸ் மருத்து வமனைக்கு மட்டும் ஜப்பான் நிதி என அறிவித்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒன்றிய அரசின் நேரடி நிதியை பெற்று இருந்தால் இன்றைக்கு எம்ய்ஸ் மருத்துவமனை பயன்பாட்டுக்கு வந்திருக்கும் என்றார்.

தமிழ்நாடு மருத்துவக் கல்லூரியில் எம்ய்ஸ் மருத்துவமனை மாணவர்கள் 4ஆவது ஆண்டாக கல்வி பயில்கிறார்கள். காலம் கனிந்து வரும் ஒன்றிய அரசு விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டும் எனும் நம்பிக்கை உள்ளது.

உடல், உறுப்பு தான அறுவை சிகிச்சை மேற்க் கொள்ள தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டு உள்ளது. மக்களிடம் உடல், உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு நிலுவையில் உள்ள அரசின் நிதியுதவி படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு கூறினார்.