புதுடெல்லி:
விவசாயிகள் போராட்டம் நீடித்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் குடியரசுத் தலைவரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 26-ந்தேதியில் இருந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்திய அவர்கள், நேற்றிரவு அமித் ஷாவை சந்தித்தனர். இந்த கூட்டத்திலும் முடிவு எட்டப்படவில்லை.
இதற்கிடையில் இன்று எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவரை சந்தித்து வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று மாலை ராகுல் காந்தி, சீதாரம் யெச்சூர், டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சி பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர். அப்போது ‘‘விவசாயிகள் தினமும் நாட்டு மக்களுக்காகவே உழைக்கின்றனர். விவசாயிகளின் நலனுக்காக இந்த சட்டம் என பிரதமர் கூறுகிறார். அப்படி என்றால், விவசாயிகள் ஏன் போராடுகின்றனர்?. இதனை திரும்ப பெற வேண்டும் என குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தினோம்’’ என்றனர்.