டில்லி

வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த அறிவது குறித்த வழிமுறைகளைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வரும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.  இந்த அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விதிமுறைகளையும் தெரிவித்துள்ளது.  குறிப்பாகக் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் அது குறித்து பொதுமக்களுக்கு விரிவான தகவல்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதாவது தங்கள் மீதான வழக்குகள், அதற்குப் பெற்ற தண்டனை விவரங்கள் போன்றவை குறித்து விரிவாக அறிவிக்க வேண்டும்.  இந்த அறிவிப்பை தங்கள் தேர்தல் பிரசார காலத்தில் 3 முறை செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி  சேனல்கள் மூலம் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மக்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

அதன்படி வேட்புமனு திரும்பப்பெற்ற முதல் 4 நாட்களுக்குள் ஒருமுறை, 5 முதல் 8-வது நாட்களுக்குள் ஒருமுறை, 9-வது நாளில் இருந்து தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளுக்கு (வாக்கெடுப்பு தேதிக்கு 2 நாட்களுக்கு முன்பு) இடையில் ஒருமுறை என 3 முறை குற்றப்பின்னணி விவரங்களை வெளியிட வேண்டும்.

உதாரணமாக, வேட்புமனு திரும்பப்பெறுவதற்கான கடைசி நாள் மாதத்தின் 10-ந் தேதியாகவும், வாக்குப்பதிவு 24-ந் தேதியாகவும் இருந்தால், முதலாவது அறிவிப்பை 11 மற்றும் 14-ந் தேதிக்கு இடையே வெளியிட வேண்டும்.  15 மற்றும் 18-ந் தேதிக்கு இடையே 2-வது அறிவிப்பையும், 19 மற்றும் 22-ந் தேதிக்கு இடையே 3-வது அறிவிப்பையும் வெளியிட வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இதைப்போல அந்த வேட்பாளரை களமிறக்கும் அரசியல் கட்சிகளும் அவர்களது குற்றப்பின்னணி விவரங்களை இணையதளங்கள் மற்றும் செய்தித்தாள், தொலைக்காட்சி சேனல்கள் மூலம் வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த நடவடிக்கைகள் மூலம் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பது குறித்து முழுமையாக அறிந்து கொள்ள முடியும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.