அ.தி.மு.க.வின் அதிகாபூர்வ நாளேடான “நமது எம்.ஜி.ஆர்.” இதழில் “சித்ரகுப்தன்” பெயரில் வரும் கவிதைகள் ரொம்பவே பிரசித்தம்.

அ.தி.மு.க.வை விமர்சிப்போர்களை தனது பிரத்யேக மொழி நடையில் விளாசித்தள்ளிவிடுவார் சித்ரகுப்தன்.

ஆனால் நேற்றைய இதழில் வெளியாகியிருப்பது நிஜமாகவே கவிதை.. ஆதங்க கவிதை!

“நீரின்றி அமையாது உலகு”

இது நீரின்றி அழியுமோ உலகு என்றாகி வருகிறது!

மூன்றாம் உலகப் போர் மூளுவதாக இருந்தால்

அது தண்ணீருக்காகவே என்கிறது

ஒரு தொலைநோக்கு ஆரூடம்!

அந்தத் துயரம்,

இந்தியாவில் இருந்தே தொடங்கிடுமோ எனும் அச்சம்

காந்தி தேசத்துக்கு கவலை தருகிறது!

ஆழிசூழ் உலகமாக இருப்பினும் அதில்

உயிரினங்கள் பயன்பெறv ஏதுவாக

நீர்வளம் என்பது இப்பூமிப் பந்தில்
மூன்று சதம் மட்டுமே என்றிருக்க…

அதனை பரிவோடும், பகுத்தறிவோடும்

பகிர்ந்து பருகுவதே

உலகெங்கும் இதுகாறும் வழக்கமாயிருக்க…

புத்தனும், காந்தியும்,

வாடிய பயிர் கண்டு வாடிய வள்ளலாரும்

வந்துதித்த நாட்டிலோ தண்ணீர் தாவாக்கள்..!

அதைத் தர மறுக்கும் தாதாக்கள்..!

பலமுறை நம்மீது படையெடுத்த பாகிஸ்தானுக்கும்

சிக்கல் இல்லாமல் சிந்து நதி செல்கிறது!

நைல் நதிநீரை சூடானும்&  எகிப்தும்

பிணக்குகள் இன்றியே பிரித்துக் கொள்கிறது!

கொலம்பியா நதியை கனடாவும்& அமெரிக்காவும்

பகுத்துண்டு பகிர்கின்றன!

ஆனால்

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என உலகையே உறவாகக் கருதிய

கணியன் பூங்குன்றன் அவதரித்த கன்னித் தமிழ் பூமிக்கோ

காவேரி தண்ணீர் தர= கைவிரிக்குது கர்நாடகம்…

முல்லையாற்று முழுஉரிமைக்கு முட்டுக்கட்டை போடுது கேரளம்…

பாலாறிலும் கோளாறு செய்திட அணை கட்டுது ஆந்திரம்…

இப்படி  நற்றமிழ் பூமியின் நதி உரிமை யாவிலும்

அத்துமீறி தடை போடுது அண்டை மாநிலங்கள்…

அதற்கு மறுப்பேதும் கூறாமல்  உச்சநீதிமன்ற உத்தரவுக்கும்

உடன்பட மறுத்து ஒத்தடம் கொடுக்குது

நடுநிலை தவறுகிற நடுவண் அரசு எனில்…

“பாலைவனங்கள் இயற்கையாக உருவானவை அல்ல

செயற்கையாக மனிதனால் உருவாக்கப்பட்டதே”

என்னும் மாமேதை என்கல்ஸின் கருத்துக்கு

தமிழ் மண்ணோ தற்காலச் சான்றாவது?

தாய்நாடே விடைசொல்-?

       – சித்ரகுப்தன்