சென்னை: தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் விறுவிறுவென நிரம்பி வருகின்றன. முக்கிய ஏரியான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகமாக இருப்பதால், விரைவில் முழு கொள்அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல புழல் ஏரியும் முழு கொள்ளவை நெருங்கி உள்ளது.

தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் நேற்று முதல்  மழை கொட்டி வருகிறது. ஏற்கனவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில் பல மாவட்ட ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அப்போது வட மாவட்டங்களில் உள்ள சாத்தனூர் அணை உள்பட பல அணைகள் நிரம்பியதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல கிராமங்கள் தண்ணீரால் சூப்பட்டன.

இந்த நிலையில், தற்போது வங்கக்கடலில் உருவாகி உள்ளதீவிர  காற்றுத்த மண்டலம்  காரணமாக,  நேற்று இரவு முதல்  சென்னை மற்றும் புறநகர் பகுகிளில் பெய்து வரும் கனமழை காரணமாக  சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது செம்பரம்பாக்கம் ஏரி. இந்த ஏரியிலிருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் தண்ணீர் திருநீர்மலை, குன்றத்தூர், திருமுடிவாக்கம், சிறுகளத்தூர், மணப்பாக்கம், நத்தம் வழியாக ராமநாதபுரம், நத்தம் பக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கோட்டூர் வழியாக அடையாறு முகத்துவாரம் சென்றடைகின்றது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து 713 கனஅடியாக உள்ள நிலையில்  தற்போது முழு கொள் அளவில் 80 சதவீதம் நிரம்பியது.  24 அடி மொத்த கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி, ஃபெஞ்சல் புயலினால் ஏற்ப்பட்ட மழையின் காரணமாக  நீர் இருப்பு 20.61 அடியாக உயர்ந்திருந்தது. இந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு அடி உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இதுபோன்று மழை பெய்தால் அடுத்த 10 நாட்களுக்குள் ஏரி நிரம்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதுபோல,  கனமழை காரணமாக புழல் ஏரி ‘ விரைவில் முழு நீர்மட்டத்தை எட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. 21 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் நீர்மட்டம் 18.80 அடியாக உள்ள நிலையில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. புழல் ஏரிக்கான நீர்வரத்து 629 கனஅடியாக உள்ள நிலையில் ஏரியின் பாதுகாப்பு நலன் கருதி அப்படியே வெளியேற்றப்படுகிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,300 மில்லியன் கனஅடியில் தற்போதைய நீர்இருப்பு 2,771 மில்லியன் கனஅடியாக உள்ளது.