மேட்டூர்: காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,710 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஒகனேக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்காக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.
மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று(அக். 6) காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,713 கன அடியாக இருந்தது. இன்று(அக். 7) காலை நீர் வரத்து வினாடிக்கு 15,710 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 92.60 அடியில் இருந்து 92.58 அடியாக சற்று குறைந்துள்ளது. அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 55.64 டிஎம்சியாக உள்ளது.
இதற்கிடையில், காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.