சென்னை: சமீபத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நடிகை குஷ்பு, பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், நிரந்தரமாக ‘கை கழுவுங்கள்’ என காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளார்.

பிரபல நடிகையான குஷ்பு, சமூக அக்கறை கொண்டவர். தன்னை பெண்ணியவாதியாக காட்டிக்கொண்டு அரசியல் செய்து வருகிறார். முதலில் திமுகவில் இணைந்து கட்சிப் பணியாற்றிய நிலையில், தலைமைக்கு எதிராக கருத்துகூறியதால், திமுக தொண்டர்களால் தாக்கப்பட்டு, காங்கிரஸ் கட்சியில் அடைக்கலம் தேடினார். சில வருடங்களாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாக இருந்து வந்தார். பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாகஅங்கிருந்து விலகி பாரதியஜனதா கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், தற்போது பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், அங்கு ஆர்ஜேடியுடன் கூட்டணி வைத்த காங்கிரஸ் கட்சி குறைவான தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இதை குறிப்பிட்டு, டிவிட் பதிவிட்டுள்ள குஷ்பு,

“அடிக்கடி கை கழுவுங்கள் இது corona சொல்லிய பாடம். நிரந்தரமாய் ‘கை‘யை கழுவுங்கள் இது மோடி ஜி பீகாரில் உணர்த்திய பாடம் வரும் தேர்தலில் தமிழகம் இதை எதிரொலிக்கும்!!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் கூட்டணிகள் மாறும் என்றும் காங்கிரஸ் தனித்து விடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் டி விட்டரில் பதிவிட்டிருந்ததும்,  காங்கிரஸ் கட்சி மூளை வளர்ச்சி இல்லாதது என்று விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.