மும்பை :

பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

“பீகார் தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். அதற்கு பல காரணங்கள் உள்ளன. இந்த தேர்தலில் வெற்றி பெற பிரதமர் மோடி தனிப்பட்ட அக்கறை காட்டினார்” என குறிப்பிட்ட சரத்பவார் “மோடிக்கு, இந்த தேர்தலில் அனுபவம் இல்லாத தேஜஸ்வி யாதவ் கடுமையான போட்டியை கொடுத்தார்” என்று பாராட்டினார்.

“ஒரு பக்கம் அனுபவம் இல்லாத தேஜஸ்வி போன்ற இளைஞர்கள். மறு பக்கமோ, குஜராத்தில் பல ஆண்டுகள் முதல்-அமைச்சராகவும், இப்போது இரண்டாம் முறையாக பிரதமராகவும் உள்ள மோடி மற்றும் பீகார் முதல்-அமைச்சராக பல ஆண்டுகள் இருக்கும் நிதீஷ்குமார்” என்று குறிப்பிட்ட சரத்பவார், “ஆர்.ஜே.டி. தலைமையிலான மெகா கூட்டணி கைப்பற்றும் இடங்கள் ஒரு புறம் இருந்தாலும், இளைய தலைமுறைக்கு பீகார் தேர்தல் நிச்சயமாக ஒரு உத்வேகமாக இருக்கும்” என்று தேஜஸ்விக்கு புகழாரம் சூட்டினார்.

– பா. பாரதி