மதுரை:

கும்பகோணம் தாலுகாவில் உள்ள உடையலூரில் ராஜராஜ சோழன் உடல் தகனம் செய்யப்பட்டதாக கூறப்படும் இடத்தில், தொல்லியல் துறையினர் ஆய்வை தொடங்கியுள்ளனர்.


உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுவில், கி.மு. 1014-ம் ஆண்டில் பிறந்தவர் ராஜராஜ சோழன். இவர் தமிழ்நாடு, இலங்கையின் மூன்றில் இரு பகுதி, கர்நாடகாவின் ஒரு பகுதி, மாலத்தீவு மற்றும் கிழக்கு ஆசியாவை ஆண்டார்.

கட்டிடக் கலையின் அதிசயமான தஞ்சை பெரிய கோயிலை கட்டியவர். இவரது உடல் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகாவில் உள்ள உடையலூரில் தகனம் செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

அந்த இடத்தை ஆய்வு செய்து உறுதி செய்தபின்னர், ராஜராஜ சோழனுக்கு நினைவு மண்டபம் கட்ட வேண்டும். சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அமைத்தது போல் பிரம்மாண்ட சிலை அமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, தொல்பொருள் ஆய்வாளர்களைக் கொண்ட குழுவை அமைத்து, உடையலூரில் ராஜராஜ சோழன் தகனம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் இடத்தை ஆய்வு நடத்தவும், தேவைப்பட்டால் அகழ்வாராய்ச்சி நடத்தவும் உத்தரவிட்டது.

இதில் நிபுணத்துவம் பெற்றவர்களிடம் குழுவினர் ஆலோசனை பெறலாம் என்றும் நீதிமனறம் குறிப்பிட்டது.

இதனையடுத்து, உடையலூரில் பணியை தொடங்கிய அதிகாரிகள், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ராஜ ராஜ சோழன் உடல் தகனம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் சோதனையை தொடங்கியுள்ளோம்.

நீதிமன்ற உத்தரவுப்படி, புவியியல் தகவல் முறையின் அடிப்படையில் இந்த ஆய்வை நடத்துகிறோம். ஜிபிஆர்ஸ்-யும் பயன்படுத்துகின்றோம்.

10 நாட்களுக்குள் இதன் முடிவு தெரியவரும். நீதிமன்ற உத்தரவுப்படி அகழ்வாராய்ச்சி தேவையா என்பது குறித்து முடிவு செய்வோம். அதன்பின்னர் நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்வோம் என்றனர்.