டில்லி:

கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக பணமதிப்பிழப்பு திட்டமிட்டு கொண்டு வரப்பட்டதா? என்று வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள் சந்தேகத்தை கிளப்பியுள்ளனர்.

‘‘பணமதிப்பிழப்பு காரணமாக ஏ.டி.எம்.களில் மாற்றம் செய்யப்பட்டதற்கு எவ்வித கட்டணத்தையும் வங்கி ஊழியர்களுக்கு மட்டுமின்றி வங்கிகளுக்கும் அரசு இது வரை வழங்கவில்லை’’ என்று இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பிரதீப் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,‘‘ பணமதிப்பிழப்பு அறிவிப்பு கறுப்பு பணத்தை வெளிகொண்டு வரும் நோக்கில் அறிவிக்கப்பட்டதாக அரசு தெரிவித்தது. ஆனால், இதில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளது. நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.15.44 லட்சம் கோடி நோட்டுக்களில் 99 சதவீதம், அதாவது ரூ.15.28 லட்சம் கோடி வங்கிக்கு திரும்பி வந்துவிட்டது என்று ஆர்பிஐ ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கறுப்பு பணத்துக்கு எதிரான போராட்டம், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்வதை தடுக்கவும், கள்ள ரூபாய் நோட்டு புழக்கத்தை தடுக்கும் நடவடிக்கை என்று மத்திய அரசு விளக்கம் அளித்து வந்தது. ஆனால், தற்போது இவை அனைத்துமே பொய்த்து போய்விட்டது. மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பால் வங்கி ஊழியர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர்’’ என்றார்.

அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு துணைப் பொதுச் செயலாளர் சஞ்சய் தாஸ் கூறுகையில், ‘‘பணமதிப்பிழப்பு பிரச்னையால் 100 பேர் இறந்துள்ளனர். இதில் 10 பேர் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளும் அடக்கம். வங்கி ஊழியர்கள் அபரிமிதமான பணியை மேற்கொண்டனர். இதில் சிலருக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டது. கூடுதல் பணி மேற்கொண்டதில் 50 சதவீதத்திற்கு மேலான ஊழியர்கள் இன்னும் அதற்கான ஊதியத்தை பெற முடியாத நிலை உள்ளது’’ என்றார்.

இச்சங்க பொதுச் செயலாளர் வெங்கடாச்சலம் கூறுகையில், ‘‘இந்த ஒட்டு மொத்த செயலும் வங்கி ஊழியர்களின் மனதில் பெரிய வடுவை ஏற்படுத்திவிட்டது. லட்சகணக்கான மக்கள் செல்லாத ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்ய வந்த போது அவர்களை எதிர்கொண்டது வங்கி ஊழியர்களுக்கு மிகப் பெரிய சவாலாக தான் அமைந்திருந்தது.

இந்த கூடுதல் சுமை குறித்து வங்கி நிர்வாகங்கள் இதை கண்டு கொள்ளவில்லை. சனி, ஞாயிற்று கிழமைகளில் கூட ஊழியர்களை பணியாற்ற ஆர்பிஐ வலியுறுத்தியது. அதிகாரிகள், சில எழுத்தர்கள் மாலை நேரங்களில் நீண்ட நேரம் வங்கி கிளைகளில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது’’ என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘அதிக அளவிலான ரூபாய்கள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டதால், பணம் கொடுக்கும் பணிகளில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இது வங்கிகளின் வருவாயை வெகுவாக பாதித்தது. வங்கிகளின் வளர்ச்சி 2016&17ம் ஆண்டில் 5.1 சதவீதத்திற்கு குறைந்துவிட்டது.

அதற்கு முந்தைய 5 ஆண்டுகளில் வங்கிகளின் வளர்ச்சி சராசரியாக 11.72 சதவீதம் வரை இருந்தது. பண பரிமாற்றத்திலேயே கவனம் செலுத்தி வந்ததால் வங்கிகளின் பற்று வளர்ச்சி கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்துவிட்டது’’ என்றார்.

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தாமஸ் பிரான்கோ ராஜேந்திர தேவ் கூறுகையில், ‘‘ஆரம்பத்தில் அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றோம். ஆனால், வங்கி ஊழியர்களுக்கு இது ஒரு கொடுமையான கனவாக மாறிவிட்டது. வங்கி ஊழியர்கள் தான் புதிய ரூபாய் நோட்டுக்களை வழங்க மறுக்கிறார்கள் என்று மக்கள் கருதினர்.

ஆனால், ஆர்பிஐ தனியார் வங்கிகளுக்கு மட்டுமே புதிய ரூபாய் நோட்டுக்களை விநியோகம் செய்தது. அரசு வங்கிகளுக்கு வழங்கப்படவில்லை. தொழிலதிபர்கள், தொழிற்சாலை அதிபர்களுக்கு புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சகத்தில் இருந்து நேரடியாக கொடுக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்’’ என்றார்.

சங்க நிர்வாகிகள் இது போன்ற கருத்துக்களை தெரிவித்தாலும், சில அதிகாரிகள் பொருளாதாரத்தில் பணமதிப்பிழப்பின் தாக்கம் தெரிவது என்பது நீண்ட கால திட்டமாகும். ‘‘மக்கள் குறை கூற தான் செய்கின்றனர். எனினும் பணமதிப்பிழப்பு அறிவிப்பால் பெரிய அளவிலான பணம் புழக்கத்திற்கு வந்துள்ளது. வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணி தற்போது குறைந்துள்ளது. கடன் வழங்குவோர் வட்டி சதவீத்ததை குறைத்துள்ளனர்’’ என்று பஞ்சாப் நேஷனல் வங்கி செயல் இயக்குனர் சஞ்சீவ் சரன் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், ‘‘தற்போது ஒரு ஆண்டு முடிந்துவிட்டது. பொருளாதார நிலையில் முன்னேற்றம் வேண்டும். வீட்டு கடன் மற்றும் உள்ளகட்டமைப்பு மேம்பாட்டுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுப்பது, கடன் தேவை அதிகரிப்பதன் மூலம் இந்த முன்னேற்றத்தை அடைய முடியும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் பணமதிப்பிழப்பு பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டது போன்று தெரிகிறது. அடுத்த சில ஆண்டுகளில் இது நமக்கு உதவியாக இருக்கும்’’ என்றார்.