வாஷிங்டன்

மெரிக்காவின் புகழ் பெற்ற பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் அறக்கட்டளையின் அறங்காவலர் வாரன் பஃபெட் ராஜினாமா செய்துள்ளார்.

உலக புகழ்பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவன முன்னாள் அதிபரும் நிறுவனவருமான பில் கேட்ஸ் தனது மனைவி மெலிண்டாவுடன் இணைந்து பில் அண்ட் மெலிண்டா ஃபவுண்டேஷன் என்னும் அறக்கட்டளையை நடத்தி வந்தார்.  இவர்களுடன் சேர்ந்து இந்த அறக்கட்டளையைத்  தொடங்கிய வாரன் பஃபெட் இதில் அறங்காவலர் பதவி வகித்து வந்தார்.

பெர்க்‌ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான வாரன் பஃபெட் அமெரிக்காவைச் சேர்ந்த பெரும் செல்வந்தர்களில் ஒருவர் ஆவார்.   இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு கேட்ஸ் ஃபவுண்டேஷன்  தொடங்கிய போது மேலும் நான்கு அறக்கட்டளைகளைத் தொடக்கி நடத்தி வருகிறார்.   

சமீபத்தில் பில் கேட்ஸ் மற்றும் அவர் மனைவி மெலிண்டா கேட்ஸ் இருவரும் விவாகரத்து செய்துக் கொள்ளப் போவதாக அறிவித்தனர்.  இதனால் கேட்ஸ் ஃபவுண்டேஷன் அறக்கட்டளை பாதிக்கப்படலாம் என பலரும் எண்ணிய நிலையில் அறக்கட்டளை பணிகளை இருவரும் தொடர்ந்து நடத்துவதாக அறிவித்தனர். 

இந்நிலையில் வாரன் பஃபெட் இந்த அறக்கட்டளையின் அறங்காவலர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. வாரன் பஃபெட் ராஜினாமா குறித்த தகவல்கள் மட்டுமே வெளியாகி உள்ளதே தவிர அதற்கான காரணங்கள் இன்னும் வெளியாகவில்லை.