சென்னை:
தமிழகத்தின் பல இடங்களில் அரசியல் கட்சிகள், பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் தருவதாக கூறி கூட்டம் சேர்த்து வருகின்றனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருகிறது.
தமிழக அரசியல்வாதிகள் அனைத்து வகையான நிகழ்வுகளிலும் அரசியல் செய்வது வழக்கமான நடவடிக்கைதான். அதுபோல உயிரை பறிக்கும் கொரோனா வைரஸ் விவகாரத்திலும் அரசியல் செய்து வருகின்றனர். இதனால் பாதிக்கப்படப்போவது அப்பாவி மக்கள்தான்.
துப்புரவு பணியாளர்கள், பொதுமக்கள், ஏழை மக்கள், குடிசைவாசிகள் என பலதரப்பட்ட மக்களிடையே, இலவசமாக முகக்வசம், கைகழுவும் சானிடைசர், சோப்பு மற்றும் உணவு, உணவுப்பொருட்கள் தருவதாக கூறி கூட்டத்தை சேர்த்து வருகின்றனர்.
இலவசத்துக்கு ஆசைப்பட்டு, அரசியல்வாதிகளின் மாய்மால வார்த்தைகளை நம்பி , உயிரைப்பற்றிக் கவலைக்கொள்ளாமல், வயதானவர்கள் உள்பட ஏராளமானோர் நிவாரணங்களை பெற கூடி வருகின்றனர்.
இவர்கள் யாரும் கொரோனா பரவல் மற்றும் அதன் தாக்கம், அதனால் ஏற்பட்டு வரும் உயிரிழப்புகள் பற்றி கவலைப்படுவதில்லை.
கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும், மக்கள் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டும் வருகிறது. ஆனால், நமது அரசியல்வாதிகள், தங்களது அரசியல் எதிர்காலத்திற்காக, பல இடங்களில், அரிசி, முகக்கவசம், உணவு தருவதாகக் கூறி கூட்டம் சேர்த்து வருகின்றனர்.
பல இடங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தும் அரசியல்வாதிகளில் யாருக்காவது, ஒருவேளை கொரோனா தொற்று பரவியிருந்தால், அவர்களால் நடத்தப்படும் இதுபோன்ற நிவாரணக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் நூற்றுக்கணக்கானோரும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும்.
சமூக இடைவெளியைக் கூட பின்பற்றாமல் பொதுமக்களை அரசியல்வாதிகள் கூட்டுவதால், பொதுமக்கள் குறிப்பாக ஏழைபாளைகள் உயிருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
அரசியல்வாதிகளின் இந்த அலப்பறை கூட்டங்களுக்கு தமிழகஅரசு தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளம்பர மோகத்தில் சிக்கித்விக்கும் தமிழக அரசியல்வாதிகள், இந்த இக்கட்டன நேரத்தில் கொரோனா நிவாரண உதவி என்ற பெயரில் அரசியல் செய்ய வேண்டாம் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.