நாகூர்

க்ஃபு வாரிய செயல் அலுவலர் பரிதாபானு நாகூர் ஆண்டவர் தர்காவுக்கு நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம்  நாகூர் ஆண்டவர்  தர்கா நிர்வாகம், நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலர்கள் 8 பேரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்த பரம்பரை அறங்காவலர்களில் ஒருவர் இறந்ததையடுத்து, தர்காவை நிர்வாகம் செய்வதில் அறங்காவலர்களுக்குள் ஏற்பட்ட போட்டி மற்றும் முரண்பாடு காரணமாக, நீதிமன்ற உத்தரவுப்படி, 2017 முதல் ஓய்வுபெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி அலாவுதீன், ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் ஆகியோர் இடைக்கால நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர்.இவர்கள்  4 மாதங்கள் மட்டுமே இடைக்கால நிர்வாகிகளாக நியமிக்கப்பட்ட போதிலும் 4 ஆண்டுகளுக்கும் மேலாகத் தர்கா நிர்வாகத்தை கவனித்து வந்தனர்.

இது குறித்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர், 4 மாதங்களுக்கு நியமிக்கப்பட்ட தற்காலிக நிர்வாகக் குழு 4 ஆண்டுகளுக்கு மேல் தொடர்வதால், இக்குழுவை ஏன் கலைக்கக் கூடாது என கேள்வி எழுப்பினர். மேலும், இதுகுறித்து தற்காலிக நிர்வாகக் குழு மார்ச் 10-ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் எனவும், அதுவரை இக்குழு தர்கா நிர்வாகத்தை கவனிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் தர்கா நிர்வாகத்தை வக்ஃபு வாரியம் கையில் எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.  இதனால், நாகூர் தர்கா மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள நாகூர் அங்காடி ஆகியவற்றைத் தமிழ்நாடு வக்ஃபு வாரிய முதன்மை செயல் அலுவலர் பரிதாபானு  தலைமையிலான நிர்வாக அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.  அவர்கள் இடைக்கால நிர்வாகிகளின் அறை, அவர்கள் பயன்படுத்திய கோப்புகள் உள்ள அலமாரிகள், பாதுகாப்புப் பெட்டகம் ஆகியவற்றைப் பூட்டி, சீல் வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, இடைக்கால நிர்வாகிகள், அலுவல் பணி மேற்கொள்ளத் தடை விதித்தனர்.  தர்கா நிர்வாகத்தைத் தமிழ்நாடு வக்ஃபு வாரிய முதன்மை செயல் அலுவலர் பரிதா பானு நிர்வகிப்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால நிர்வாகிகள் பதவி வகித்த காலங்களில் செய்யப்பட்ட செலவினங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.