சென்னை,
தமிழகத்தில் பொதுமக்கள் வீடு கட்ட மணல் தேவைக்கு… வெப்சைட், ஆப் அறிமுகம் செய்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் மணல் பதுக்கல் காரணமாக பொதுமக்களுக்கு மணல் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதையடுத்து, அரசே பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணல் எளிதில் கிடைத்திட ஏதுவாக, ‘தமிழ்நாடு மணல் இணைய சேவை’ (www.tnsand.in) இணையதளத்தையும் (tnsand) செல்லிடைபேசி (app) செயலியையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதல் எடப்பாடி பழனிச்சாமி இணைய சேவையை தொடங்கி வைத்து அதுகுறித்த கையேட்டையும் வெளியிட்டார்.
தமிழக அரசு தொடங்கியுள்ள இணையதளம் மூலம் மக்கள் தங்களின் கட்டுமான தேவை களுக்கான மணலை ஆன்லைனில் பதிவு செய்து, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் குவாரிகளுக்கும் மணல் விற்பனை நிலையங்களுக்கும் வந்து நேரடியாக மணலைப் பெற்றுக்கொள்ளலாம்.
மணல் பெற்றுக்கொள்வதற்கு, கணினி மென்பொருள் மற்றும் செல்லிடைபேசி செயலியைப் பயன்படுத்துவதுகுறித்து, பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள், அரசு மணல் குவாரிகளில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, பொதுப்பணித்துறையின் வாயிலாக 28.6.2017 முதல் 30.6.2017 வரை பயிற்சியளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கென தனியாக ஓர் உபயோகிப்பாளர் கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.
இன்று தொடங்கப்பட்ட இணையதள சேவை அடுத்த மாதம் (ஜூலை) ‘தமிழ்நாடு மணல் இணைய சேவை’ 1.7.2017 முதல் உபயோகிப்பாளர்களின் பயன்பாட்டிற்கு வருகிறது.
மேலும், 1.7.2017 முதல் பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள் தங்களுடைய மணல் தேவையை இணைய சேவைமூலம் மட்டுமே முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.