யூனியன் பிரதேசமான டெல்லியில் 7 மக்களவை தொகுதிகள் உள்ளன. ஆம் ஆத்மி , பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இங்கு பிரதான கட்சிகள்.
இந்த மூன்று கட்சிகளும் தனித்தனியாக நின்றால் வாக்குகள் பிரிந்து பா.ஜ.க.வெல்லும் சூழல் உள்ளது. இதனால் காங்கிரசுடன் கூட்டணி வைக்க விரும்பினார்-ஆம் ஆத்மி தலைவரும் ,டெல்லி முதல்-அமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால்.
‘’ஆளுக்கு 3 இடங்களை பிரித்துக்கொண்டு –ஒரு தொகுதியில் பொது வேட்பாளரை நிறுத்தலாம்’ என்பது கெஜ்ரிவால் திட்டம்.
ஆனால்- ஆம் ஆத்மியுடன் உறவே கூடாது என்கிறார்கள்- உள்ளூர் காங்கிரசார்.அண்மையில் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட ஷீலா தீட்ஷித்துக்கு- ஆம் ஆத்மியுடன் உடன்பாடு வைப்பதில் துளியும் இஷ்டம் இல்லை.
பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டுமானால்- ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்தே தீர வேண்டும் என்பது ராகுல் விருப்பம்.இந்த பிரச்சினையில் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் நிறையவே குழம்பி இருப்பவர்- டெல்லி மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்- பி.சி.சாக்கோ.
கடைசியாக அவர் ஒரு நூதன முறையை கையாண்டு- கூட்டணி விவகாரத்தில் உறுதியான முடிவை எடுக்க திட்டமிட்டுள்ளார்.
பூத் கமிட்டி அளவில் காங்கிரஸ் தொண்டர்களை ஒருங்கிணைக்கும் வகையில் ராகுல்காந்தி- ‘சக்தி புராஜெக்ட்’ என்ற திட்டத்தை ஆரம்பித்துள்ளார்..டெல்லியில் இந்த திட்டத்தின் கீழ்- 52 ஆயிரம் காங்கிரஸ் தொண்டர்கள் பதிவு செய்துள்ளனர்.
அவர்களின் செல்போனில் தொடர்பு கொண்டு-ஆம் ஆத்மியுடன் உடன்பாடு வேண்டுமா? வேண்டாமா?என்று கருத்து கேட்டு- கூட்டணியை முடிவு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை நேற்றே தொடங்கி விட்டது.
டெல்லியில் காங்கிரஸ் தலைவராக இருந்த அஜய் மகான் அண்மையில் பதவி விலகினார். அவருக்கு பதிலாக யாரை காங்கிரஸ் தலைவராக நியமிக்கலாம் என- இது போல் கருத்து கேட்டே- ஷீலா தீட்ஷித் தலைவர் பொறுப்பில் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
–பாப்பாங்குளம் பாரதி