அகமதாபாத்: மருத்துவர்களை இடமாற்றும் விஷயத்தில் அகமதாபாத் மாநகராட்சி – மருத்துவக் கல்வி அறக்கட்டளை எடுத்துள்ள முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு, எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது.

என்.எச்.எல். முனிசிபல் மருத்துவக் கல்லூரியில் தற்போது கற்பித்துவரும் 55 மருத்துவர்களை, அவர்கள் தற்போது பணிபுரியும் ஷேத் வாடிலால் சாராபாய் மருத்துவமனைக்குப் பதிலாக, புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றுமாறு பணித்துள்ளது, அகமதாபாத் மாநகராட்சி – மருத்துவக் கல்வி அறக்கட்டளை.

இந்த முடிவுதான் தற்போது சர்ச்சையையும் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது.

கடந்த 1931ம் ஆண்டு நிறுவப்பட்ட வாடிலால் சாராபாய் மருத்துவமனையில், அகமதாபாத்தை சேர்ந்த சினாய் குடும்பம் உள்ளிட்ட சிலரின் நன்கொடையால், நோயாளிகள் குறைந்த விலையில் மருத்துவ சேவைகளைப் பெற முடிகிறது.

இந்த மருத்துவமனை என்.எச்.எல். மருத்துவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற மாநகராட்சி வாரியக் கூட்டத்தில், அந்த இணைப்பை ரத்துசெய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், அந்தக் கூட்டத்தை, வாடிலால் சாராபாய் மருத்துவமனையின் அறக்கட்டளை நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துப் புறக்கணித்தார்கள். ஆனால், எதிர்தரப்போ, “மருத்துவ பேராசிரியர்களை மட்டும்தான் நாங்கள் இடமாற்றம் செய்துள்ளோம்” என்று கூறுகிறார்கள்.

– மதுரை மாயாண்டி