டில்லி

த்திய சுகாதார அமைச்சகம் தனது தூக்கத்தில் இருந்து எழுந்து கொரோனா சவால்களைச் சந்திக்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

 

இரண்டாம் அலை கொரோனா பரவலால் நாடு முழுவதும் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது.  நேற்று வரை 2.26 கோடி பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு அதில் சுமார் 2.46 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை சுமார் 1.86 கோடிக்கும் அதிகமானோர் குணம் அடைந்து தற்போது 31.74 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இவர்களுக்கு மருத்துவமனைகளில் போதுமான இட வசதிகள் இல்லாமை, ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் பற்றாக்குறை கடுமையாக உள்ளது.   இந்த வசதிகளை மத்திய அரசின் சுகாதாரத்துறை அளிக்காமல் மெத்தனம் காட்டுவதாக பொதுவாகப் பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.   இந்நிலையில் இந்திய மருத்துவ சங்கம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளது.

அந்த கடிதத்தில் காணப்படும் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :

”நாடெங்கும் கொரோனா பாதிப்பால் மக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.   மத்திய அரசு தனது தூக்கத்தில் இருந்து எழுந்து தற்போது கொரோனா  பாதிப்பு எழுப்பி உள்ள சவால்களைச் சந்திக்கத் தயாராக வேண்டும்.   எங்கள் சங்கம் மற்றும் உறுப்பினர்கள் ஏற்கனவே இது குறித்துத் தெரிவித்துள்ள ஆலோசனைகள் அனைத்தையும் தற்போதைய மோசமான நிலை புரியாத அமைச்சகம் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு எவ்வித முடிவும் எடுக்கவில்லை.

பல மாநிலங்களில் 10 முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் மத்திய அரசு அதற்கு மாறாகத் திட்டமிட்டு முன் அறிவிப்புடன் கடந்த 20 நாட்களாக ஊரடங்கை அறிவித்திருக்கலாம்.  இதன் மூலம் கொரோனா சிகிச்சைக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார் செய்வதுடன் கொரோனா பரவலையும் கட்டுப்படுத்தி இருக்க முடியும்.

உலக நாடுகள் அனைத்திலும் ஏற்கனவே கொரோனா தடுப்பூசிகள் போடத்தொடங்கியும் இந்தியாவில் ஏன் மிகவும் தாமதமாக இந்த பணி தொடங்கப்பட்டது.?  மேலும் இவ்வளவு தாமதமாக இப்பணி தொடங்கப்பட்ட பிறகும் ஏன் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க ஏற்பாடுகள் செய்யவில்லை?  மேலும் தடுப்பூசிகள் விலையில் இவ்வளவு குழப்பத்தை அனுமதித்தது ஏன்?

ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து அரசு ஏன் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது?  தற்போது மருத்துவ அவசியம் அதிகரித்ததையொட்டி மத்திய அரசு இவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.  மேலும் ஒரு சுகாதார அமைப்பு நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்து அதற்கு மொத்த ஜிடிபியில் 8% ஒதுக்கீடு செய்ய வேண்டும்’

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.