2 நாள் பொறுத்திருங்கள். – சஸ்பென்ஸ் வைத்தார் தினகரன்!

சென்னை,

கஸ்டு 5ந்தேதி முதல் தீவிர கட்சி பணியில் ஈடுபடுவேன் என்று அறிவித்துள்ள டிடிவி தினகரன், இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்திருங்கள் என்று சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.

தற்போது சசிகலாவின் உறவினர்கள் இணைந்துள்ள நிலையில், டிடிவி தினகரனின் சஸ்பென்ஸ் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரட்டை இலையை தங்களது அணிக்கு ஒதுக்க கோரி, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி.தினகரன் கைது செய்யப்பட்டு  திகார் சிறை அடைக்கப்பட்டார்.

முன்னதாக, அதிமுகவின் இரு அணிகளும் இணைய கால அவகாசம் கொடுப்பதாகவும், அதுவரை சில காலம் கட்சி பணியில் இருந்து ஒதுங்கி இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து அதிமுக மீண்டும் இணைய முயற்சி நடைபெற்றது.  ஓபிஎஸ் தரப்பினர் மற்றும் அதிமுக கட்சி தொண்டர்களின் விருப்பப்படி, சசிகலா, தினகரன் மற்றும் அவர்களது குடும்பத்தினரை  கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சர்கள்  மற்றும்  நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் சசிகலா மற்றும் டிடிவி.தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக முடிவு செய்யப்பட்டது.

இதன் காரணமாக சசிகலா அணியும் இரண்டாக உடைந்தது.

இந்நிலையில், இரட்டை இலை வழக்கில்,  ஜாமீனில் வெளியே வந்த டிடிவி.தினகரன், கட்சியை இனி நானே வழி நடத்துவேன் என அறிவித்தார்.

இது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் ஜெயக்குமார், டிடிவி தினகரன் கட்சியில் இருந்து ஒதுங்கியே இருக்க வேண்டும் என்று கூறினார்.

ஆனால், அதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், அமைச்சர்கள் யாருக்கோ பயந்து பேசுகிறார்கள் என்றம்,  மேலும், இரு அணிகளும் இணைவதாக கூறியதால், கட்சியில் இருந்து நான் விலகி இருந்தேன். ஆகஸ்டு 5ந்தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்படுவதாகவும் அறிவித்தார்.  ஆனால், இதுவரை அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதனால், இனி கட்சியை நானும், ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமியும் வழி நடத்துவோம் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், டிடிவி தினகரன், நேற்று, வரும் (ஆகஸ்டு)  5ம் தேதி அனைத்து மாவட்ட நிர்வாகிகள், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இது எடப்பாடி அணியினரிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக நேற்று மாலை தலைமைசெயலகத்தில் திடீரென தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று, அதிமுக தலமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், சசிகலாவின் உறவினர்  துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிடிவி தினகரன், திவாகரன், வெங்கடேஷ் ஆகியோர் மீண்டும் இணைந்து கட்சியை கைப்பற்றுவது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், இன்னும் 2 நாட்கள் பொறுத்திருங்கள் என்று செய்தியாளர்களிடம் சஸ்பெண்ஸ் வைத்து பேசினார்.

மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகளை சந்திக்க முடிவு செய்துள்ளேன். அதன்படி அனைத்து தொண்டர்களையும் சந்திப்பேன். முன்னதாக வரும் 5ம் தேதி மாவட்ட நிர்வாகிகளையும், அதிமுக தலைமை அலுவலகத்தில் சந்திப்பேன் என்று கூறினார்.

மேலும், நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் கட்சியை பலப்படுத்துவதே எனது பணியாக இருக்கும்.

தற்போது பிரிந்துள்ள இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே எனது விருப்பம். இதற்காக 60 நாட்கள் அவகாசம் கொடுத்தேன். ஆனால், இதுவரை எந்த முடிவு எடுக்காமல், அமைச்சர்களும் காலம் கடத்தி வருகின்றனர். இதில் எள்ளலவும் முன்னேற்றமில்லை.

கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் என்ற முறையில், இனி கட்சியை நானே வழி நடத்த முடிவு செய்து விட்டேன்.  எனது பணியை நான் செய்வேன்… நான் ஏற்கனவே சொன்னது போல், எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி நல்லமுறையில் நடந்து வருகிறது. அவரே முதல்வராக பணியாற்றுவார்.  இதில், எந்த மாற்றமும் ஏற்படாது.

அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் கூறிய கருத்துக்கு நான் எந்த பதிலும் கூற விரும்ப வில்லை. அவரை நான் எனது நல்ல நண்பராகவே பார்க்கிறேன். எனது பணி கட்சியின் நலன் சார்ந்தே இருக்கும் என்று கூறினார்.

தற்போது அதிமுக தலைமைக்கழகம் எடப்பாடியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், டிவி.தினகரன் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி, அதிமுக தலைமை அலுவலகத்தில்  நிர்வாகிகளை சந்தித்து பேசுவேன் என்று அறிவித்துள்ளதால், அதிமுகவில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இதன் காரணமாக அதிமுக தலைமை அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

ஏற்கனவே டிடிவி.தினகரனுக்கு 37 எம்எல்ஏக்களும், 6 எம்பிக்களும் ஆதரவு தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே எம்.ஜி.ஆர். மறைவின்போது, கடந்த 1989ம் ஆண்டு  இதேபோல் அதிமுக ஜெ. அணி, ஜா அணி என்று உடைந்தபோது அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்ற இரு அணிகள் மோதி கொண்டன. அப்போது, அதிமுக அலுவலகத்துக்கு பூட்டு போடப்பட்டது. அதே நிலை மீண்டும் ஏற்படுமோ என அதிமுக தொண்டர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags: 2 நாள் பொறுத்திருங்கள். - சஸ்பெண்ட் வைத்தார் தினகரன்!, wait for 2 days. - ttv.dhinakaran Suspens