சென்னை: ஜெயலலிதா நினைவிடம் கட்டும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு கூலிப் பாக்கியை தராமல் திறப்பு விழா நடத்தினால் ஆளுநரிடம் புகார் செய்வோம் என்று தொழிலாளர்களும், ஓட்டுநர்களும் தெரிவித்து உள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இறந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. அங்கு ஜெயலலிதா நினைவிடம் கட்ட முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணி 2018ம் ஆண்டு மே 8ந் தேதி தொடங்கப்பட்டது.
தொடர்ந்து இரவு, பகலாக ஒப்பந்தக்காரர்களுடன், பொதுப்பணித்துறை தீவிரமாக பணிகளில் ஈடுபட்டு வந்தது. கொரோனா மற்றும் மழை காரணமாக திட்டமிட்ட காலத்தில் பணிகள் முடிப்பதில் சற்று காலதாமதம் ஆனது.
ஆனாலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணிகளின் முன்னேற்றம் குறித்து அடிக்கடி ஆய்வு செய்து ஆலோசனை வழங்கி வந்தார். தற்போது நினைவிடம் பணிகள் நிறைவடைந்து வரும் 27ம் தேதி திறக்கப்பட உள்ளது.
இந் நிலையில், நினைவிடம் கட்டும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு கூலிப் பாக்கியை தராமல் திறப்பு விழா நடத்தினால் ஆளுநரிடம் புகார் செய்வோம் என்று தொழிலாளர்களும், ஓட்டுநர்களும் தெரிவித்து உள்ளனர். இது குறித்து அவர்கள் கூறி இருப்பதாவது:
ஒப்பந்ததாரர்களிடம் சென்றால் தமக்கே பணம் வரவில்லை என்று கூறுகின்றனர். அரசிடம் இருந்து பணம் வராமல் எப்படி தரமுடியும் என்று கேட்கின்றனர்? வியர்வை சிந்தி உழைத்த லாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்டவர்களுக்கு தர வேண்டிய பணத்தை செட்டில் செய்யாமல் திறப்பு விழா வைப்பது எப்படி நியாயம்? எனவே உடனடியாக பாக்கி பணத்தை தர வேண்டும் என்று அவர்கள் கூறி உள்ளனர்.