சென்னை: கணேசபுரம் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணியை முன்னிட்டு புளியந்தோப்பு பகுதியில் இன்று முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது.
வடசென்னையின் நுழைவு வாயிலாக கருதப்படும் வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதையானது, வடசென்னையின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் வியாசர்பாடி, கொளத்தூர், மாதவரம், கொடுங்கையூர், கண்ணதாசன் நகர், மகாகவி பாரதியார் நகர், மூலக்கடை ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு வியாசர்பாடி கணேசபுரம் ரெயில்வே சுரங்கப்பாதையை கடந்து செல்ல வேண்டும். இந்த சுரங்கப்பாதையில், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி வந்ததால், போக்குவரத்து தடை பட்டு, பொதுமக்களுக்கு கடும் அசவுகரியத்தை ஏற்படுத்தி வந்தது. அப்பகுதி மக்கள் மாற்றுப்பாதை வழியாக தங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மேம்பாலம் கட்ட வேண்டும் என வடசென்னை மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, திமுக அரசு பதவி ஏற்றதும், சென்னை மாநகராட்சி மூலமாக அங்கு மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ரூ.142 கோடி செலவில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு தனியார் நிறுவனம் மேம்பாலம் கட்டுமான பணியை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ரெயில்வே மேம்பாலம் புதிய தொழில் நுட்பத்தில் சென்னை ஐ.ஐ.டி.யின் அங்கீகாரத்துடன் கட்டப்படுகிறது.
இந்த மேம்பாலம் 15.2 மீட்டர் அகலத்திலும் 600 மீட்டர் நீளத்திலும் கட்டப்படுகிறது. புளியந்தோப்பு ஆட்டுதொட்டியில் இருந்து செல்லும்போது 2 வழியாகவும் வியாசர்பாடியில் இருந்து புளியந்தோப்புக்கு வரும்போது 2 வழியாகவும் மொத்தம் 4 வழி பாதையாக இந்த மேம்பாலம் அமைக்கப்படுகிறது. ஆட்டுத்தொட்டியை அடுத்த கால்வாய் பகுதியில் இருந்து மேம்பாலம் தொடங்கி ரெயில்வே சுரங்கப்பாதையை கடந்து பெட்ரோல் பங்க் வரை கட்டப்படுகிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், அந்த பகுதி ஒரு வழிப்பாதையாக மாற்றி போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகர காவல் போக்குவரத்து போலீஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சியும், ரயில்வே துறையும் இணைந்து புளியந்தோப்பு டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் மேம்பாலம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன்படி, பெரம்பூர் மற்றும் வியாசர் பாடியில் இருந்து டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை, கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை வழியாக புரசைவாக்கம் நோக்கி வரும்வாகனங்களுக்கான சாலை ஒருவழிப் பாதையாக செயல்படுத்தப்படும்.
புரசைவாக்கம், டவுட்டனில் இருந்து பெரம்பூர், வியாசர்பாடி, மாதவரம் செல்ல டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக வரும் வாகனங்கள் டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை, ஸ்டீபன்சன் சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை தெற்கு, முரசொலி மாறன் மேம்பாலம், பெரம்பூர் ரயில் நிலையம் சந்திப்பு வழியாக செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.