டெல்லி: தோ்தல்களில் வாக்களிப்பதை கட்டாயமாக்கக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
தேர்தல்களில் வாக்களிப்பதை கட்டாயமாக்க முடியாது என கூறிய உச்ச நீதிமன்றம் ‘மக்களை வாக்களிக்கக் கட்டாயப்படுத்த முடியாது’ என வாக்களிப்பைக் கட்டாயமாக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

வாக்களிக்க மறுக்கும் நபர்களுக்கு அரசாங்கத்தின் சலுகைகள் மறுக்கப்பட வேண்டும் என்று மனுதாரர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், இந்தியாவில் கட்டாய வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்தவும், வேண்டுமென்றே வாக்களிக்காமல் இருப்பவர்களுக்குத் தண்டனை விளைவுகளை ஏற்படுத்தவும் உத்தரவிடக் கோரியிருந்தார்.
தாக்கல் செய்யப்பட்ட ஒரு பொதுநல மனுவை, உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 16) நிராகரித்தது. தேர்தல்களில் பங்கேற்பதை வற்புறுத்தல் நடவடிக்கைகள் மூலம் அமல்படுத்த முடியாது என்று நீதிமன்றம் அப்போது குறிப்பிட்டது.
இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மால்ய பக்ஷி மற்றும் நீதிபதி விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்த நிலையில், சட்டத்தின் ஆட்சி நடைபெறும் ஒரு ஜனநாயகத்தில் குடிமக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், தனிநபர்களை வாக்களிக்க அரசு கட்டாயப்படுத்த முடியாது என்று கருத்து தெரிவித்தது.
அப்போது மனுதாரர் வழக்கறிஞர், கட்டாய வாக்களிப்புக்கான வழிகாட்டுதல்களை வகுக்க ஒரு குழுவை அமைக்குமாறும், முறையான காரணங்கள் இல்லாமல் வாக்களிக்கத் தவறுபவர்களுக்குச் சில அரசாங்கச் சலுகைகள் கிடைப்பதில் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்துப் பரிசீலிக்குமாறும் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிடலாம் என்று மனுதாரரின் வழக்கறிஞர் பரிந்துரைத்தார்.
அந்த முன்மொழிவுக்குப் பதிலளித்த தலைமை நீதிபதி, அத்தகைய கட்டாய உத்தரவை அமல்படுத்துவதில் உள்ள சாத்தியக்கூறுகள் மற்றும் சட்டபூர்வத்தன்மை குறித்துக் கேள்விகளை எழுப்பினார்.
‘சட்ட ரீதியிலான நிா்ப்பந்தத்தைக் காட்டிலும், பொது விழிப்புணா்வில்தான் ஜனநாயகம் செழித்து வளர முடியும். சட்டத்தின் ஆட்சியால் ஆளப்படும், ஜனநாயகத்தில் நம்பிக்கைகொண்ட இந்த நாட்டில், அனைவரும் சென்று வாக்களிக்க வேண்டும் என்று எதிா்பாா்க்கிறோம். அவா்கள் வாக்களிக்கச் செல்லவில்லை என்றால், அவா்களைக் கட்டாயப்படுத்த முடியாது. தேவைப்படுவது விழிப்புணா்வுதான்.
.அதோடு, தோ்தல் நாளில் நீதிபதிகள் உள்பட பல குடிமக்களும் பணிபுரிய வேண்டிய அவசியம் உள்ள நிலையில், வாக்களிப்பதை கட்டாயமாக்கும் சட்டம் கொண்டுவருவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது..மேலும், இந்த விவகாரம் அரசின் கொள்கை முடிவு சாா்ந்த விஷயம். இதில் நீதிமன்றம் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. எனவே, மனுதாரா் மத்திய அரசை அணுகி தனது கோரிக்கைக்குத் தீா்வு காணலாம்’ என்று குறிப்பிட்டு, மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து உத்தரவிட்டாா்.