
நாடு போலி வாக்குகளை நீக்கும் வகையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. ஏற்கனவே பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முதல்கட்டமாக கடந்த ஆகஸ்ட் மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் மறைவு, இடம்பெயர்வு போன்ற காரணங்களுக்காக சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டனர். ஆனால், இதுகுறித்து வாக்காளர் தரப்பில் எந்தவொரு கோரிக்கையும் வராத நிலையில், காங்கிரஸ் உள்பட சில அரசியல் கட்சிகள் மட்டுமே குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதையடுத்து நாடு முழுவதும் தீவிர வாக்காளர் பட்டியர் சீர்திருத்தம் பணி மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, தமிழ்நாடு உள்பட அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் நவம்பர் 4ந்தேதி முதல் எஸ்ஐஆர் பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை மேற்கொண்டார். இதில், கலந்து கொண்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களது நிலைப்பாட்டை பதிவு செய்தனர்.
இநத நிலையில், தமிழ்நாட்டில் நவம்பர் 4ந்தேதி (நாளை) முதல் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் பணிகள் தொடங்க உள்ளன. மாநிலம் முழுதும், 234 சட்டசபை தொகுதி களிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை, இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டபடி நாளை துவங்கவுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், நாளை முதல் டிசம்பர் 4ம் தேதி வரை, வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை அரசியல் கட்சிகளின் ஏஜன்டுகளுடன் இணைந்து, அரசு ஊழியர்கள் மேற்கொள்ள உள்ளனர். தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ம் தேதியும், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.7ம் தேதியும் வெளியிடப்பட உள்ளன.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எதிர்பார்த்ததை விட சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அனைத்து வழக்குகளை யும் நவம்பர் 13ம் தேதிக்கு பட்டியலிட சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.