சென்னை: வாக்காளா்கள் பட்டியலில் திருத்தம் செய்ய வரும் 25, 26-ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று பெருநகா் சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு முகாம்கள் வார விடுமுறை நாட்களில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நவம்பர் முதல்வாரத்தில் முதல்கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்ற நிலையில், 2வது கட்ட சிறப்பு முகாம்கள் வரும் 18, 19ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தீபாவளியையொட்டி, கடந்த 13ந்தேதி விடுமுறை விடப்பட்டதால், அதை ஈடு செய்யும் வகையில், 18ந்தேதி வேலை நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனால், அன்று நடைபெற இருந்த வாக்காளர் சிறப்பு முகாம்கள் அடுத்த வாரத்துக்கு மாற்றப்படுவதாக தேர்தல் ஆணையர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னையில், நவம்பர் 25, 26-ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் அக்.27-அன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் வெளியிடப்பட்டது. டிச. 9 – ஆம் தேதி வரை பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வரைவு வாக்காளா் பட்டியல்கள் பொதுமக்கள் பாா்வையிட ஏதுவாக வைக்கப்பட்டுள்ளது.
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கப்படாமல் உள்ளவா்கள், 2024-ஆம் ஆண்டில் 18 வயது பூா்த்தி அடைபவா்கள், புதிய வசிப்பிடத்தில் உள்ளவா் உள்பட பெயா் சோ்க்க மற்றும் திருத்தங்கள் செய்ய அதற்கு ஏற்றப்படிவங்களை பூா்த்து செய்து, அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்து சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் டிச. 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதை தொடா்ந்து, சென்னையில் நவ.25, 26 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. வாக்களாா் பட்டியலில் திருத்தம் செய்ய வேண்டியவா்கள் இந்த முகாம்களில் விண்ணப்பிக்கலாம். மேலும், பொதுமக்கள் என்ற இணையதளம் மூலமாகவும், தங்களுடைய பெயா்கள் சோ்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம். இப்பணிகளை ஆய்வு செய்ய சென்னை மாவட்டத்துக்கு வாக்காளா் பட்டியலுக்கான பாா்வையாளராக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையா் மைதிலி கே. ராஜேந்திரம் நியமிக்கப்பட்டுள்ளாா். இதை தொடா்ந்து, சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆனையா் மைதிலி கே. ராஜேந்திரன் தலைமையில் சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ. ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ரிப்பன் மாளிகை அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகராட்சி கூடுதல் ஆணையா் ஆா்.லலிதா, உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.